பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ‌‌ ‌‌ தமிழர் வரலாறு

அமைந்து, அதனால் காவற்காடு என அழைக்கப்பட்டது. வஞ்சி மாலை அணிந்த படைத்தலைவர்கள், காட்டு நிலத்துள், படையெடுத்துச் சென்றனர்; இது வஞ்சித்தினை என அழைக்கப்பட்டது. அரசர்கள், தங்கள் தலைநகர்களை, ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதாவது மருதத்தில் நிறுவியபோது, தங்கள் காப்பிற்காகக் கோட்டைகளைக் கட்டினார்கள்; முற்றுகையும், அது தொடர்பான செயல்களும் போர் முறைகளில் ஒர் அங்கமாகி விட்டன. இந் நடவடிக்கைகளின்போது, உழிஞைக் கொடி அணிந்து கொள்ளப்பட்டது. அதனால் அந்நடவடிக்கைகளை விளக்கும் பாடல்கள் உழிஞை என்ற இனத்தின் கீழ் வந்தன. போர்த் தந்திரங்களைப் பேராண்மைகளை மேற்கொள்ள நேரிடும், எதிர் எதிர் நின்று செய்யும் போர்கள், மரங்கள் செறிந்த காட்டு நிலங்களுக்கும், விளை நிலங்களுக்கும் வெகுதொலை விலான, திறந்த போர்க்களத்திலேயே இயலுமாதலின், நெய்தல் என அழைக்கப்படும் கடற்கரைக்கு அணித்தாக உள்ள, அகன்ற சம நிலங்களோடு தொடர்புடையதாகி, இந் நிகழ்ச்சிகளில், தும்பை மாலைகள் அணிந்துகொள்ளப் பட்டமையால், தும்பை என அழைக்கப்பட்டன. இறுதியாகப் பாலை நிலத்தோடு தொடர்புடைய காதலர்களின் பிரிவோடு ஒத்திருப்பது, பாவாணர்கள், வாகை மலர் மாலை அணிந்து கொண்டு, போரின் அவலம் போர்களிலிருந்து விளையும் நாட்டழிவுகளைப் பாடுவது போலவே, வெற்றிகளையும் பாடும், வாகை ஆகும்.

  பல்வேறு வகைப்பட்ட இத்திணைப் பாடல்களெல்லாம் மலர்களால் பெயர் சூட்டப்பட்டுள்ளன என்பது ஈண்டுக் குறிப்பிடல் வேண்டும். ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு நிலத்தின், தனிச்சிறப்பியல்பு வாய்ந்த விளைபொருளாம். இம்மலர்களால் ஆன மாலைகள், காதல் துறையின், அல்லது போர்த்துறையின் விளக்கப்படும் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியின் சின்னமாக அணிந்து கொள்ளப்பட்டன. மலர்கள் போர்க்கள நிகழ்ச்சியின்போது, போர் வீரர்களை இனம் பிரித்து உணர்த்தும் சீரணிகளாக அமைந்தன. பழந்