பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

484

தமிழர் வரலாறு

நாட்டில் நிலைத்த குடியினராய் வாழ்ந்திருந்தனர். உரோமப் பொறியாளர்கள், தமிழ் அரசர்களுக்காகக், கோட்டை மதில்களைத் தகர்த்து அழிக்க வல்ல, உலோகப் பூணிட்ட பெருந்துாலங்களையும், மதில் வாயிற்கண் பொறித்து வைக்கப்படும், பல்வேறு தற்காப்புப் பொறிப்படைகளையும் செய்து தந்தனர். தொல்காப்பியர், போரின் ஒரு நிலையாம் உழிஞைப் போரை விளக்குங்கால், கோட்டையை முற்றுகை செய்வதும், முடிவாகக் கைப்பற்றிக் கொள்வதும் எனக் கூறியுள்ளார்,

"முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்

அனைநெறி மரபிற்று ஆகும் என்ப"

-தொல் : பொருள் : புறம் : 10


உரையாசிரியர் நச்சினார்க்கினியர், “யவனர் இயற்றிய பலபொறிகளும், ஏனைய பொறிகளும்” என, யவனர், அக்கால அரசர்களுக்குப் படைக்கலப் பொறிகள் பண்ணித் தந்ததைக் குறிப்பிட்டுள்ளார். கோட்டை மதில்கள் பல்வேறு பொறிப்படைகள் பொருத்தப்பெற்றுப் பகைவர் எளிதில் துழையா வாறு காக்கப்பட்டிருக்கும் என்பதைத், “திங்களும் துழையா எந்திரப் படுபுழை” என்ற புறநானூற்றுப் பாடல் வரியும், (177 : 5) தெளிவாக்குகிறது. மதுரையில் அரசன் பெருங்கோயிலைச் சூழ இருந்த மதில் வாயிற்கண் பொருத்தப் பெற்றிருந்த பொறிப்படைகளின் பட்டியலைச் சிலப்பதிகாரம் வெளியிட்டுளது “ 1) வளைந்து தானே எய்யும் எந்திரவில், 2) கரிய விரல்களை உடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி, 3) கற்களை உமிழும் கவண் பொறி, 4) கொதிக்கும் எண்ணெயை வாரி இறைக்கும் பொறி 5) உருக்கிய செம்பை உமிழும் பொறி, 6) உருக்கிய எஃகை உமிழும் பொறி, 7) கல்லுமிழ் கவனுக்கு வேண்டும் கற்களைக் கொடுத்து உதவும் பொறிக் கூடை, 8) துண்டில் வடிவில் பண்ணப்பட்டு, மிதிலைப் பற்றுவாரைக் கோத்து வலிக்கும் தூண்டிற் பொறி 9) கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலி, 10) ஆடவர் தலை