பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

585

கோடியாம் கொங்குநாடே எனினும், காஞ்சி எனும் பெயரே, பழந்தமிழ் இலக்கியத்தில் இடம் பெறவில்லை என்ற கூற்றினை மறுக்கவல்ல, நல்ல வலுவான சான்றாக, அது, அமைந்துவிட்டது.

மேலும், காஞ்சி எனும் பெயரைக், கொங்கு நாடு சென்றுதான் தேடி அலையவேண்டும் என்ற தேவையும் இல்லை. காஞ்சியிலேயே, அது, காணக்கிடக்கிறது: நற்றிணை 123ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர், காஞ்சிப் புலவர் என்பது. அதுபோலவே, குறுந்தொகை, 173 ஆம் பாடலைப் பாடிய புலவர், மதுரைக் காஞ்சிப்புலவர் என்பது, அதே குறுந்தொகையில் 213, 216 பாடல்களைப் பாடிய புலவர் பெயர், கச்சிப் பேட்டுக்காஞ்சிக் கொற்றனார் என்பது. இவர் பெயரில் காஞ்சியின் பிறிதொரு பெயரும், பெரும்பாணாற்றுப்படையால், திரையன் தலை நகராம் பெருமைப்படுத்தப்பட்டதுமான கச்சியும் இணைந்தே வழங்கப்பெறுவது கவனிக்கத்தக்கது. மேலும், அதே குறுந்தொகையில், 30,172,180,192,197,287 பாடல்களைப் பாடிய ஒரு பெண்பாற்புலவர் பெயர், கச்சிப்பேட்டு நன்னாகையார் என்பது ; கூறிய எடுத்துக்காட்டுக்களால், புலவர் பலரை அளித்த பெருமைக்கு உரியது காஞ்சியும், கச்சியும் என்பதும், தத்தம் இயற்பெயர்களோடு, தாம் பிறந்த ஊர்ப்பெயரை இணைத்துக்கொள்வது, தமக்குப் பெருமை சேர்க்கும் என உணர்ந்து சேர்த்துக் கொள்ளப்படுமளவு பெருமை பெற்ற பெருநகராகக், காஞ்சியும், கச்சியும் திகழ்ந்தன என்பதும் தெளிவாயின.

புலவர்களை ஈன்று அளித்த பெருமை, காஞ்சிக்கும் கச்சிக்கும் மட்டுமே தனி உரிமையாய் அமைந்துவிடவில்லை; அப்பேரூர்களைத் தலைநகராகக் கொண்ட காஞ்சிக்கு அணித்தாக, மேற்கே உள்ள தாமலும், காஞ்சிக்குக் கிழக்கே, சற்றே தொலைவில் உள்ள உரோடகமும் கூடப், புவவர்களைப் பெற்றளித்த பெருமையினைப் பங்கிட்டுக் கொண்டுள்ளன. சோழன் நலங்கிள்ளி தம்பி, மாவளத்தானோடு.