பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

9

பெற்ற, பூத்தொழில்களால் புனையப்பட்ட, பாம்பின்தோல் போலும் மென்மையான ஆடைகளை அளித்தான். கார்மேகமோ எனக் கண்டவர் மருளுதற்கேற்பக் கறுத்து நீண்ட, கூந்தலையுடையவரும், மகிழ்ச்சிதரும் மேனில மாடங்களில் உலாவருவாரும், அணிகள் பல அணிந்து அழகுற்றவரும், எப்போதும் இனிய புன்னகையே உடையாருமாகிய ஏவல் மகளிர், கள்ளைக் குற்றமற்ற பொன்னால் செய்யப்பட்ட கலங்கள் வழியுமாறு, பலகாலும் வார்த்து வார்த்துத் தர, வழிநடை வருத்தம் தீர நிறைய உண்டு, காண்டற்கினிய கள் கிடைக்கப்பெற்றிலமே என, நெஞ்சிற்கிடந்த பழங்கவலையும் தீர்ந்துபோகப் பெற்று மகிழ்ந்திருந்தேன். மாலை வந்துற்றதும், செல்வம் மலிந்தி கிடக்கும், அம்மன்னவன் அரண்மனையில் ஒருபால் தங்கியிருந்தேன். தவஞ்செய்வார், அத்தவம் மேற்கொள்ளும் தம் உடம்பை அழித்துக் கொள்ளாமல் இருந்தே, அத்தவத்தாலாம் பயனன அடைவது போலவே, வழிநடை வருத்தத்தைச் சிறிதும் இல்லாவாறு போக்கிக் கள்ளை அளவிறந்து உண்டுவிட்டதன் விளைவாம் உடல் உறுப்புக்களின் நடுக்கமல்லது வேறு மனக் கலக்கம் ஏதும் இன்றி, மெய் மறந்து உறங்கிப் பின்னர்த் துயில் ஒழிந்து எழுந்தேன். நாம் பெற்றிருக்கும் இவ்வினிய வாழ்க்கை உண்மையானதாக இருக்குமோ என ஐயுற்றுக் கலங்கும் என் நெஞ்சம், இது கனவன்று; நனவுதான் என்று துணிந்து கொள்ளவும், கொடிய வறுமையால் உற்ற துன்பத்தால் நிறைந்திருந்த என் உள்ளம், பெற்றுள்ள, பேரின்ப வாழ்க்கையை எண்ணி எண்ணி மகிழவும், கரிகாலனைக் கண்ட நாளைய முன்னாள் மாலையில், என்னிடத்தே குடிகொண்டிருத்த கொடிய வறுமைக்காட்சிகளையும் கரிகாலனைக் கண்டுவிட்ட அன்றைய காலைப்போதில், “நெருநல் நாம் கண்ணுற்ற இரவலன் தானா இவன்!” எனப் பார்த்தவர் மருண்டு போவதற்குக் காரணமாம் வகையில், அகிலும் ஆரமும், மலரும் போலும் மணப்பொருள்களை மேனியெங்கும் கொண்டுவிட்டமையால் வண்டுகள் வந்து