பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டிய அரசர்கள்

183

காண்டு நாவார வாழ்த்துதலால் சிறப்புற்று, அவர்களைக் காக்கும் கடவுளாம் விஷ்ணு இடங்கொண்டகோயில்."

"திண்கதிர் மதாணி ஒண் குறுமாக்களை
ஒம்பினர்த் தழீஇத், தாம் புணர்ந்து முயங்கித்,
தாதுஅணி தாமரைப் போது பிடித்தாங்குத்
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்,
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்,
பூவினர், புகையினர், தொழுவனர், பழிச்சிச்

சிறந்து புறம் காக்கும் கடவுள் பள்ளி."
-மதுரைக்காஞ்சி : 451-467.

வைதீக வழிபாட்டு முறையும், சிலரால் பின்பற்றப்பட்டது. "சிறந்த வேதங்களை, அவற்றின் பொருள் விளங்குமாறுபாடி, அவை கூறும் மிகச் சிறந்த ஒழுக்க நெறியில் வாழ்ந்து, நால்வகை நிலவளமும் வாய்ந்த இந்நில உலகில் சிறந்த தலைமையுடையார் தாம் ஒருவரே ஆகுமாறு உயர்ந்து, உயர்ந்த நிலையுடையதான வீட்டுலக இன்பத்தை, இவ்வுலகில் இருந்தவாறே அடைவதற்கு வழியாக, அற வழியில் திரியாது நின்று, உயிர்கள் மாட்டு அன்பு செலுத்தும் உயர்ந்த உள்ளம் வாய்ந்த பெரியார்கள், விரும்பி இனிதே வாழும் மலையைக் குடைந்து ஆக்கினாற்போலும், அந்தணர் குடியிருப்புக்கள்."

"சிறந்த வேதம் விளங்கப் பாடி,
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து,
நிலம்அமர் வையத்து ஒரு தாம் ஆகி,
உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும்,
அறநெறி பிழையா, அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்

குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளி."
-மதுரைக்காஞ்சி : 468-474.