பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

251


செருக்குற்றுத் தம் புகழை உயர்த்திக்கூறும் அரசர்களின் வீரம் கெட்டழியுமாறு அவர்களை வென்று மார்புமாலை, ஓடையளவும் தாழ்ந்து விளங்கும், பகைவர் கோட்டைகளை அழிக்கும் வெற்றிப்புகழ் வாய்ந்த தந்தங்களைக் கொண்ட, குற்றமில்லாத யானையின் பொன்னரி மாலை அணிந்த பிடரிமீது அமர்ந்து உலாவரும் பலரும்புகழும் உன் செல்வச் சிறப்பினை இனிதே காண்கிறோம்."

"மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்
பலர் புகழ் செல்வம், இனிதுகண் டிகுமே :
கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்,
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்

தென்னங் குமரியொடு ஆயிடை"
-பதிற்று. 11: 1 - 25;

வெறும் வெற்றுப் புகழுரைகளாம் வைக்கோற் போரிலிருந்து உண்மைச்செய்தியாம் மணியனைத் தேடிக் காண்பது அத்துணை எளிதன்று. நெடுஞ்சேரலாதன் சேரநாட்டின் எல்லைக்கு வடக்கில் சில மைல் வரை (கடம்பர் நாட்டிலும், கொண்காளத்திலும்) படையெடுத்துச் சென்று சில வெற்றிப் பொருட்களைக் கொண்டு வந்திருக்கக்கூடும் : புலவர்கள், பரிசில் பெறும் வேட்கை மிகுதியால், அச்செயலை இந்தியப் பெருநாடு முழுவதும் அவன் பேரரசின் விரிவாகக் கொண்டு பாராட்டவும், அதன் காரணத்தால் இமயத்தை எல்லையாகக் கொண்ட பெருநாட்டுக்குரியவன் எனும் பொருளுடைய தான "இமயவரம்பன்" என்ற பட்டப் பெயரைச் சூட்டியிருக்கவும் கூடும். [இப்பட்டப் பெயர் சிலப்பதிகார, மூன்றாம் காண்டம் வஞ்சிக் காண்டத்துப் பாட்டுடைத் தலைவன் செங்குட்டுவனுக்கும் வழங்கப்பட்டுளது. (இமையவரம்ப ! சிலம்பு : 26 : 23 30: 181)]{{Nop}}