பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

முருக்க மரங்கள் செறிந்த மலையில், உறங்கும் கவரி மான்கள், பகற்பொழுதில் தாம் மேய்ந்த நரந்தம் புல்லையும், பருகிய, பரந்து விளங்கும் அருவி நீரையும், கனவில் கண்டு மகிழும், ஆரியர் நிறைந்து வாழும் பெரும்புகழ் வாய்ந்த இமயம், தென் குமரி ஆகிய இவற்றிற்கு இடைப்பட்ட நாடுகளில் உள்ள, செருக்குற்றுத் தம்புகழை உயர்த்திக்கூறும் அரசர்களின் வீரம் கெட்டழியுமாறு, அவர்களை வென்று, மார்பு மாலை ஒடையளவும் தாழ்ந்து அதனோடு விளங்கும், பகைவர் கோட்டைகளை அழிக்கும் வெற்றிப் புகழ் வாய்ந்த தந்தங்களைக் கொண்ட, குற்றமில்லாத போர் யானையின், பொன்னரிமாலை அணிந்த பிடரிமீது அமர்ந்து உலாவரும், பலரும் புகழும் உன செல்வச் சிறப்பினை இனிது காண்கிறோம்.

“மார்பு மலி பைந்தார் ஒடையொடு விளங்கும்
வயன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்
பொலன்அணி எடுத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்
பலர்புகழ் செல்வம் இனிதுஉண் டிகுமே;
கவிர்ததை சிலப்பில் துஞ்சும் கவரி,
பரந்திலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே”

என்ற பதிற்றுப்பத்துப்பாடலை (11) எடுத்தாண்டுவிட்டு, “வெறும் வெற்றுப் புகழ் உரைகளாம் வைக்கோற் போரில் இருந்து உண்மைச் செய்தியாம் மணியினைத் தேடிக்காண்பது அத்துணை எளிதன்று. நெடுஞ்சேரலாதன், சேரநாட்டின்