பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 தமிழர் வரலாறு

  புலிக்கொடி பறக்கும் தேர் ஊர்ந்து செல்லும் உரிமை, சோழர் குலத்தவர் அனைவர்க்கும் உரிய ஒன்று; ஆகவே நாடுகான் காதையில் வரும் "உழைப்புலி கொடித்தேர் உரவோன்" என்ற தொடரில் வரும் அத்தொடருக்கு அடியார்க்கு நல்லார், கரிகாலன் எனப் பொருள் கொண்டதும் பொருந்தாது.
  ஆக, மேலே கூறிய விளக்கங்களால், திருமாவளவன், கரிகாலன் என்ற அவன் இயற்பெயர் விளங்கவே கூறப்பட்ட, அவன் வடநாட்டுப் படையெடுப்பு, அவன் கடல் விளையாட்டு, அவன் மகள் ஆதிமந்தி வரலாறு ஆகிய அம்மூவிடம் தவிர்த்து, சிலப்பதிகார நிகழ்ச்சிகளோடு தொடர்புபடுத்தி வழங்கியிருக்கும், சோழர் குலத்தவரைக் குறிக்கும் சென்னி, செம்பியன் போலும் பெயர்கள் கரிகாலனைக் குறிப்பதாக, உரையாசிரியர் பொருள் கொண்டது தவறு. அப்பெயர்களால் குறிப்பிடப்படுவோன் கரிகாலன் அல்லன். அவன் சிலப்பதிகாரக் காலத்துக்கு முந்தியவனே அல்லது சிலப்பதிகாரக் காலத்தவன் அல்லன் என்பன தெளிவாகின்றன.
  மேலும், சிலப்பதிகாரத்து நிகழ்ச்சிகளில், சோழநாட்டில் நிகழ்ந்தன கூறும் புகார்க் காண்டத்து இறுதியில் வரும் கட்டுரையின் தொடக்கத்திலும், பாண்டி நாட்டில் நிகழ்ந்தன கூறும் மதுரைக் காண்டத்து இறுதியில் வரும் கட்டுரையின் தொடக்கத்திலும், சேரநாட்டில் நிகழ்ந்தன கூறும் வஞ்சிக் காண்டத்து இறுதியில் வரும் கட்டுரையின் தொடக்கத்திலும், முறையே.

"முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்

தொடிவிளங்கு தடக்கைச் சோழர் குலம்";

"முடியுடை வேந்தர் மூவ ருள்ளும் படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலம்"