பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. சொல் விளக்கம்


1. மஞ்சு விரட்டு

தமிழ்நாட்டில் இன்று ‘மஞ்சு விரட்டு’ என்றும் ‘சல்லிக்கட்டு’ என்றும் அழைக்கப்பெறும் ‘மாடுபிடி சண்டை’ வேடிக்கைக்காகவும் விநோதமாகவும்-ஏன்? சில சமயங்கள் ஒன்றுக்கும் பயன் இல்லாத வீண்வினையாகவும் நடைபெறுகின்றது. இன்று தமிழகத்தின் தென்பகுதியில்தான். இது அதிகமாக நடைபெறுகின்றது. தமிழ்நாட்டுச் சிறந்த இயற்கையோடு கலந்த வழிபாடான பொங்கல் விழாவோடு இந்த ‘மஞ்சு விரட்டு’ இணைக்கப் பெறுகின்றது. மாசு அல்லது தூசு போக்கும் போகி விழா, பின் இன்பம் பொங்க வழி காணும் பொங்கல் விழா என அமைய, அடுத்து மாட்டுப் பொங்கலும் கன்றுப் (காணும்) பொங்கலும் வருகின்றன. அந்த மாட்டுப் பொங்கல் நாளில்தான் இந்தச் சல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. சிலவிடங்களில் காணும் பொங்கலன்றும் நடைபெறும்.

நல்ல காளை மாடுகளை அன்று குளிப்பாட்டி வேப்பிலை-மாவிலை முதலியன கட்டி, மாலையும் இட்டு, கொம்புகளைக் கூர்மையாக்கி, வண்ணமிட்டு ஒரு வட்ட எல்லையில் விட்டு, அதை அடக்க வரும் ‘வீரர்களை’ அழைப்பார்கள். அம்மாடுகளின் கொம்புகளில் காசுகளைக் கட்டி, அடக்குபவர் அதை எடுத்துக் கொள்ளலாம் என்பர். மாடுகள் நன்கு காக்கப் பெற்றனவாய் எந்த வேலைகளிலும் பழக்கப்படாதனவாய், இச் சல்லிக்கட்டுக்கே ஆண்டு தோறும் தயார் செய்யத் தக்கனவாகவே பெரும்பாலும் அமையும். எனவே அக்கொழுத்த மாடுகளை அடக்குவது கடினம்தான்.


1
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/11&oldid=1363492" இலிருந்து மீள்விக்கப்பட்டது