பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அரசியல் - வள்ளுவரும் சங்க காலமும்

113


நின்று செயலாற்றினார் எனக் கொள்ள வள்ளுவர் குறள் வழிகாட்டுகிறது. எனவே, குடியாட்சி முடியாட்சி இரண்டும் கலந்த ஒருவகை அரசியலே வள்ளுவர் காலத்து அரசியல் எனக் கொள்வதில் தவறு இல்லை.

கடைச்சங்க காலமாகிய வள்ளுவர் காலத்திய வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவனவே சங்கப் பாடல்கள். அவற்றுள் பல நாடாளும் நல்ல மன்னர்களைப் பாராட்டிப் பரவுகின்றன. எனினும் அவை அனைத்தும் மன்னர், குடிவழி ஒழுகி, ஆன்றோர்கண்ணாக நின்று வாழ்ந்தனர் என்பதையே காட்டுகின்றன. மேலும் ஒரு குடியில் நல்லரசர் இல்லையாயின், அந்த நல்லவராய வல்ல அரசரைத் தேர்ந்தெடுக்கும் மரபு மக்கள்பால் இருந்தது என்ற உண்மையினைக் கரிகாலன் வரலாறு நமக்கு எடுத்துக் காட்டுகின்ற தன்றோ! மன்னர் பலர் ‘குடிபழி துாற்றும் கோலால்’ ஆள அஞ்சினர் என்பதற்குப் பெருமன்னனான பாண்டியன் நெடுஞ்செழியன் முதல் பலர் சான்றதாக உள்ளனர். அவர்தம் அச்சத்தின் வழி ஆய்ந்து பார்ப்பின் சமுதாயத்தைச் சார்ந்து வாழ்ந்தாலன்றி மன்னர்க்கு உய்வில்லை என்ற உண்மை புலப்படுகின்றதே! மக்களாட்சிக் காலந்திலே ஐந்தாண்டுக்கொருமுறைதான் ஆளுவோர் மக்களிடம் செல்லும் நெறியுள்ளது. ஆனால் அன்றைய மன்னராட்சியிலே அன்றாடம் மக்களிடம் செல்லும் நிலையினைக் காண்கின்றோம். இதனாலன்றோ,

“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”

(புறம். 186)

என்று மன்னனை உயிராகவும் சமுதாயத்தை உடலாகவும் காட்டி, உயிருள்ளவரை அரசன் கடமை அன்றாடம் தன் உடலாகிய சமுதாயத்தை – உயிரினத்தை – உலகை ஒம்ப வேண்டுவது என்ற உண்மை உணர்த்தப் பெறுகின்றது. இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையரெனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/115&oldid=1358587" இலிருந்து மீள்விக்கப்பட்டது