பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

தமிழர் வாழ்வு


என்ற இருநெறிகளைக் காட்டிய வள்ளுவர், அடுத்து வரும் பொருட்பாலில் முதற்பகுதியாக இருபத்தைந்து அதிகாரங்களில் ‘அரசியல்’ பற்றிக் கூறுகின்றார். 25 அதிகாரங்களை அரசியலாகக் கொளினும், பொருட்பாலின் பிற பகுதிகளாகிய அங்கவியல், ஒழிபியல் இவற்றிலுள்ள அதிகாரங்களும் பெரும்பாலும் அவ்வரசியல் வாழ்வை ஒட்டியே அமைகின்றன. எனவே, பொருட்பால் முற்றுமே அரசியலைச் சார்ந்ததெனக் கொள்ளினும் தவறாகாது.

வள்ளுவர் காலத்தில் முடியாட்சியே சிறந்திருந்தது என்பர் அறிஞர். இறை, அரசு போன்ற சொற்கள் வள்ளுவரால் எடுத்தாளப்பெறுகின்றன. அரசன், மன்னன், இறைவன் என்ற சொற்களும் எடுத்தாளப் பெறுகின்றன. எனவே முடியாட்சி அவர் காலத்தில் அமைந்தது எனக் கொள்வது பொருத்தமே. எனினும் அம் முடியாட்சி தனிக் கோனாட்சியாகவோ, சர்வாதிகார ஆட்சியாகவோ அமைந்தது எனக் கூறமுடியுமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும். ‘அரசியல்’ பற்றி வள்ளுவர் கூறும்போது அதில் அரசுமுறை நடத்தும் நெறிகளைக் காட்டும் வள்ளுவர், ‘சூழ்வார் கண்ணாக’ அரசன் ஒழுக வேண்டிய நெறிகளை வற்புறுத்துகிறார். அமைச்சர், ஒற்றர், தூதுவர், ஐம்பெருங் குழுவினைச் சார்ந்த பிறர் உடனிருப்பதோடு பெரியார் தம் துணையும் உடன் சார வேண்டிய இன்றியமையாச் சிறப்பினையும் வற்புறுத்துகிறார். இன்றைய இங்கிலாந்து நாட்டின் அரச நிலையை ஒட்டி, அன்றைய தமிழக அரசியல் நிலை இருந்ததோ என எண்ணவும் இடம் உண்டாகிறது ஆண்டு, ‘அரசி’ செயல்துறைத் தலைமையில் இருப்பினும், நாட்டு மக்கள் நலனைக் கண்டு செயலாற்றும் – திட்டமிடும் – விதிவரம்பியக்கும் மக்கள் மன்றம் தானே முக்கியமானதாகின்றது. அப்படியே தான் அன்றும் தமிழக வேந்தர் பலரும், தாம் ஆளும் தலைமை பெற்றிருந்தாலும் அறிஞர், அமைச்சர், பெரியோர் இவர் தம் வழியே – அவர் கண்ணாகக் காட்டும் நெறியே –

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/114&oldid=1358576" இலிருந்து மீள்விக்கப்பட்டது