பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. அரசியல் - வள்ளுவரும்
சங்க காலமும்

வள்ளுவர் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வாழ்ந்த தனிப்பெரும் புலவர். ஏறக்குறைய அதே காலத்தில்தான் மதுரையில் தமிழ்ச் சங்கம் நக்கீரர் தலைமையில் நடைபெற்றுவந்ததெனக் காண்கின்றோம். வள்ளுவர் வையம் வாழ அறநெறிகளை வரையறுத்து இல்க்கண மரபின் நெறிநின்று, அறநூலாம் திருக்குறளை எழுதிய அதே காலத்திலும், சற்று முன் பின்னாகவும் சங்கப் புலவர்கள் அவ்வறநெறி பற்றி வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தினையும் அதன் புரவலர்களையும் தலைவர்களையும் பாடியுள்ளனர். ஈண்டு அந்த அறநெறியுள் நாம் காண இருப்பது அரசியல் நெறி பற்றியேயாகும்.

வள்ளுவர்தம் திருக்குறள் உலக நூலாகப் போற்றப் பெறுகின்றது. அன்றும் இன்றும் அந்நூல் உலக அறநெறி காட்டும் பெருநூலாக, எச்சமயத்தோரும் எந்நாட்டவரும் ஏற்றுக்கொள்ளும் பொது நூலாக இலங்குகின்றது. வள்ளுவர், வாழ்வின் பல்வேறு கூறுகளை நன்கு ஆராய்ந்து, கண்டு, தெளிந்து என்றென்றும் அவ்வாழ்வில் உயிர்கள் பற்ற வேண்டிய பல்வேறு அறநெறிகளைப் பற்றித் திட்ட வட்டமாகக் கூறியுள்ளார். சமுதாய வாழ்வின் செம்மை நலம் சிறக்க உள்ள நெறிகள் அத்தனையும் வள்ளுவரால் பேசப் பெறுகின்றன. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பகுப்புகளைக் காட்டி, அவற்றுள் உலக வாழ்வனைத்தையும் பூட்டிப் பொலிவு பெறச் செய்கின்றார். உலக மக்கள் வாழும் அறத்தாற்றினை-இல்லறம் துறவறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/113&oldid=1358560" இலிருந்து மீள்விக்கப்பட்டது