பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

தமிழர் வாழ்வு


முறையும் அதன் அடிப்படையில் அமைந்த சிறப்பாய இன்றைய கூட்டமும் ஆகும். அவர்தம் முயற்சி வெல்க என வாழ்த்தி என் பணியைத் தொடங்குகிறேன்.

வரலாறு என்பது, மேலை நாட்டு அறிஞர்கள் காட்டியபடி வெறும் அரசர் பரம்பரையினையும் அவர்கள் அரண்மனை வாழ்வையும் ஆற்றிய போரையும் மட்டும் குறிப்பிடுவதாகாது. அது மக்கள் வாழ்வொடு பிணைந்த ஒன்றாகும். ஆயினும் இவை மாறுவதற்குப் பெரும்பாலும் அரசியலே காரணமாக அமைந்தமையின் வரலாற்றை அந்த அந்த அடிப்படையிலே கணக்கிடுவர். அந்த உண்மையில் பார்க்கும்போது தமிழ்நாட்டு வரலாற்றில்—மக்கள் வாழ்வில் உண்டான எத்தனையோ மாற்றங்களை நம்மால் எண்ணாதிருக்க முடியாது. அவற்றுள் ஒன்றே சங்க கா ல த் து க் கு ம் ப ல் ல வ ர் காலத்துக்கும் இடையில் உண்டான பெருமாற்றம்.

சங்ககாலம் பெரும்பாலான வரலாற்று அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட முடிவின்படி கி. பி. முதல் நூற்றாண்டோடு முடிவடைவதாகும். அக்காலத்திய மக்கள் வாழ்விற்கும் ஏழாம் நூற்றாண்டில் அப்பர், சம்பந்தர் வாழ்ந்த கால மக்கள் வாழ்விற்கும் எத்தனையோ வேறுபாடுகளைக் காண்கின்றோம். ஏன் இந்த மாற்றம்?

இந்த நான்கைந்து நூற்றாண்டுக் காலத்தைத் தமிழக வரலாற்றை ஆராய்வோர் தமிழக இருண்ட காலம் என்றோ, களப்பிரர் இடையீட்டுக் காலம் என்றோ கூ று வ ர். தெ ளி ந் த ச மு தா ய வா ழ் வை க் காட்டும் சங்க காலத்துக்கும் ஏழாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட வரலாற்றை முற்றும் வரையறை செய்ய முடியாமையே இதற்குக் காரணம். ஏன் செய்யவில்லை? நாடு என்னாயிற்று?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/134&oldid=1358537" இலிருந்து மீள்விக்கப்பட்டது