பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

தமிழர் வாழ்வு


கல்வெட்டில் குறிக்கும் மரபும் உண்டாகிவிட்டன இக்காலத்திய ஆட்சி முறை, மக்கள் வாழ்க்கை நெறி முதலியவை பற்றிய தகவல் ஒன்றும் திட்டமாக நமக்குக் கிடைக்கவில்லை. எனவேதான் இக்காலத்தை இருண்ட காலம் எனக் கொண்டனர் போலும். இக்காலத்தைக் கோபாலன் அவர்கள் கி. பி. 200 முதல் 350 வரை எனக் கொள்கின்றார்.

அடுத்து வரும் சமஸ்கிருதப் பல்லவர் காலத்தை அவர் கி. பி. 350 முதல் 600 எனக் கணக்கிடுவர். கி. பி. 600இல் மகேந்திரன் பட்டமேறிய பின் பல்லவர் தம் தெளிந்த வரலாறே நமக்குக் கிடைக்கிறதன்றோ!

சமஸ்கிருதப் பல்லவர் ஆட்சியில் முறையாக யார் பின் யார் வந்தார் என்பது காண முடியாத ஒன்றாக உள்ளது. எனினும் அக்காலத்திய கல்வெட்டு, செப்பேடு முதலியவற்றாலும் பிற யூகங்களாலும் விஷ்ணுகோபன் தொடங்கி மகேந்திரன் தந்தையாகிய சிம்மவிஷ்ணு வரையில் 19 அரசர்களை முறைப்படுத்தியுள்ளனர். இக்காலத்திலேயும் மற்றொரு நாக கன்னிகையின் மணமும் அவள் மகன் வழி அரசும் குறிக்கப் பெறுகின்றன. (Gopalan's Pallavas pp. 55, 56) நாம் முன்னரே அதுபற்றி ஆய்ந்து திட்டமான முடிவைக் கூறிவிட்டமையின் மீண்டும் அது பற்றி ஆராய வேண்டா. திரு. எஸ். கே. ஐயங்கார் அவர்களும் நல்லவேளை இந்த நாக நாட்டரசியைச் சாதவாகனிரின் கீழ்ப்பட்ட ஒரு சிற்றரசர் பரம்பரையொடு சார்த்திக் கூறியுள்ளார்.

முதற் பல்லவர் காலத்தைப் போன்றே இக்காலத்திலும் உண்டான கல்வெட்டு, செப்பேடு போன்றவை அவர்தம் ஆட்சியையும் பிற இயல்புகளையும் வரையறுக்க நமக்குப் பெருந்துணை புரியவில்லை. இக் கல்வெட்டு, செப்பேடுகளைப் பற்றியும் அவைதரும் பொருள்கள் பற்றியும் முன்னரே பலர் ஆய்ந்து வெளியிட்டுள்ளனர். இவற்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/148&oldid=1359044" இலிருந்து மீள்விக்கப்பட்டது