பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

முன்னுரை

‘பசித்தவன் பழங்கணக்கைப் பார்த்தான்’ என்பது பழமொழி; அது உண்மையுங்கூட. ஆம்! எனக்குப் பசிதான். தமிழே என் வாழ்வாகத் தமிழ்ப்பணி புரிந்த நான், கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அன்னை வள்ளியம்மாள் பெயரால் அறம் அமைத்து, கல்வித் தொண்டு செய்து வருகின்ற நிலையில், தமிழ்ப் பசியுற்று, தமிழுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என எண்ணியதுண்டு. எனினும் அறப்பணியிலே அல்லும் பகலும் உழலவேண்டிய நிலையில் அதை நினைக்கக்கூட முடியவில்லை. எத்தனை எத்தனை இடர்கள்—இடர்ப்பாடுகள்—தொல்லைகள்—கொடுமைகள்—நினைக்கமுடியவில்லை. அத்தனையும் ஏற்று—மெல்ல மெல்லக் கடந்து, கடமை வழியே கருத்திருத்தி, இன்று சென்னை அண்ணாநகரில் ஓரளவு கல்வித் தொண்டினைச் செய்துவருகின்றேன். குழந்தைகள் பள்ளியாய்—ஆரம்பப்பள்ளியாய் — உயர்நிலைப்பள்ளியாய் — மேல்நிலைப்பள்ளியாய்—பட்டப்படிப்புடைக் கல்லூரியாய் வளர்ந்து—இன்னும் முதுகலை பயிலும் கல்லூரியாய் வளர என்னை மறந்து செயலாற்ற வேண்டியுள்ளது. செயல்கண்டு நல்லவர் மகிழ்வர்—வாழ்த்துவர். அல்லவர் புழுங்குவர்—பொறாமைப்படுவர். அதனால் விளையும் தொல்லைகள் பல. இறையருளாலும் அன்னையின் அருளாசியாலும் ‘தமிழாசிரியனா’கிய நான் ஓரளவு முன்னேற்றம் காண்கிறேன். எனினும் அன்னைத் தமிழுக்கு முன்னைப்போல் தொண்டாற்றமுடியவில்லையே—நூலாரம் சூட்ட முடிய வில்லையே என எண்ணி எண்ணி ஏங்கியதும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/6&oldid=1357481" இலிருந்து மீள்விக்கப்பட்டது