பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிவும் திருவும்

151


அதன் அருகே கொண்டு நிறுத்தினான்: கொடியை எடுத்துத் தேர்மீது படரவிட்டு, கவலையற்ற முகத்தோடு தன் கோட்டையை நோக்கி நடந்தான். காட்டில் வாழ்ந்த கொடியும் ஒர் உயிர் என்றுணர்ந்து, அதற்கு உற்ற குறையைக் குறிப்பால் அறிந்து, உள்ளம் நெகிழ்ந்து உதவி புரிந்த வள்ளலின் பெருமையை,

"பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி"

என்று புலவர் பெருமானாகிய கபிலர் போற்றிப் புகழ்ந்தார். பாடிவந்த பாவலர்க்குப் பரிசளித்தலோடு அமையாது. வாய்விட்டுச் சொல்ல வகையறியாப் படர் கொடிக்கும் பெருங்கொடையளித்த பாரியின் பெருமை தமிழ்நாடு முழுவதும் பரவிற்று. "கைம்மாறு கருதாது மழை பொழிந்து உலகத்தை வாழ்விக்கும் கார்மேகம் போல், எல்லா உயிர்களையும் ஒல்லும் வகையால் ஆதரித்துப் புகழ் பெற்றான் பாரி” என்று புலவர் பலர் பாராட்டினர். அற்றார்க்குப் பொருள் வழங்கி அவர் இன்முகம் கண்டு இன்புற்ற பாரியை,

"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே"

என்று பொய்யறியாக் கபிலர் போற்றிப் புகழ்ந்தார்! "மண்ணுலகைப் பாதுகாத்தற்கு மாரியும் உண்டென்பதை மறந்து, பாரி ஒருவனையே புலவர் அனைவரும் போற்றிப் புகழ்கின்றார்களே" என்று கவிஞர் அவ்வள்ளலை இகழ்வார்போற் புகழ்ந்துள்ள நயம் அறிந்து இன்புறத்தக்கதாகும்.