பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

13


கோட்டை, இப்பொழுது திண்டிவனத்திற்கருகே அழிந்துகிடக்கின்றது. சிதைந்த அகழியும் இடிந்த மதிலும் அதன் பழம் பெருமையை எடுத்துரைக்கின்றன. 'திண்டிவனம்’ என்ற சொல் புளியங்காடு என்ற பொருளைத் தரும். அவ்வனம், முற்காலத்திருந்த கிடங்கிற் கோட்டையின் காட்டரணாக இருந்தது போலும்! அக் காடு நாளடைவில் நாடாயிற்று. பழைய கோட்டையும் ஊரும் அமைந்திருந்த இடம் பாழ்பட்டது.

திண்டிவனத்திற்கு மேற்கே பதினேழு மைல் தூரத்தில் செஞ்சிக் கோட்டை அமைந்திருக்கின்றது. செஞ்சி என்ற சொல்லின் பொருள் செவ்வையாக விளங்காவிடினும் கோட்டை மதிலைக் குறிக்கும். 'இஞ்சி' என்பது அவ்வூர்ப் பெயரிலே குழைந்து கிடப்பதாகத் தோன்றுகிறது.

தரையில் அமைந்த கோட்டைகளேயன்றி, வானத்தில் ஊர்ந்து செல்லும் கோட்டைகளையும் முற்காலத் தமிழர் அறிந்திருந்தனர். ஆகாயக் கோட்டைகளை 'தூங்கு எயில்' என்று குறித்தார்கள். ஆகாய வழியாகப் போந்த மூன்று பெரிய கோட்டைகளை ஒரு சோழ மன்னன் தகர்த்தெறிந்த செய்தி, புறநானூறு முதலிய பழந்தமிழ் நூல்களால் விளங்கும். பகைவரை அழிக்கும் படைத் திறமைக்கு அவன் செயலையே எடுத்துக்காட்டாகப் புலவர்கள் பாடினர்.

இத்தகைய அருஞ்செயல் புரிந்த சோழனது இயற்பெயர் தெரியவில்லை. அவன் எப்படையைக் கொண்டு ஆகாயக் கோட்டையைத் தகர்த்தான் என்பதும் துலங்கவில்லை. ஆயினும் அவனுக்கு அமைந்துள்ள சிறப்புப் பெயரைப் பார்க்கும்பொழுது அவன் தோள் வலிமையை அக் காலத்தினர் பெரிதும்