பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியார் பாட்டின்பம்

253


பொழுது, சமண மன்னன் சீற்றமுற்றான்; மதம் மாறித் தவறிழைத்த நாவுக்கரசரைக் கொணருமாறு வெம்படை தாங்கிய வீரரைப் போக்கினான். அவ்வீரர், அப்பர் இருந்த இடம் போந்து வீரமொழி பேசி ஆரவாரித்தனர். எனினும், அவரது உருண்டு திரண்ட மேனியைக் கண்டு அப்பர் சிறிதும் அஞ்சினாரல்லர்: அவர் கையிலமைந்த படைக்கலங்களைக் கண்டு இறையளவும் கலங்கினாரல்லர்: "நாமார்க்குங் குடியல்லோம், நமனை யஞ்சோம்" என்று தொடங்கும் வீரப்பாட்டிசைத்தார். இவ்வாறு மன்னனது பரந்த படையின் முன்னே தமியராய், அஞ்சா நெஞ்சினராய் நின்று. அவன் மறப்படையைத் தம் ஆன்மவவியால் வென்ற அப்பரது வீரப்பாட்டு, பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்தது.

"யார்க்குங் குடியல்லேன் யான்என்ப
         தோர்த்தனன் மாயையே - உன்தன்
போர்க்கஞ் சுவேனோ பொடியாக்கு
         வேன்உன்னை மாயையே"

என்று தம்மை அச்சுறுத்திய மாயையைப் பழித்துப் பாடியுள்ளார். இப் பாட்டில் திருநாவுக்கரசரது வீரவுள்ளம் விளங்கக் காணலாம்.

பாரதியார் பாடிய வீரப்பாடல்களுள் தலையாக நிற்கும் தகுதி வாய்ந்தது, 'அச்சமில்லை' என்று தொடங்கும் 'பண்டாரப் பாட்டே'யாகும். அப் பாட்டிலே,

"பச்சைஊன் இயைந்தவேற் படைகள்வந்த போதினும்
  அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே"

என்றெழுந்த அடிகள், நாவுக்கரசரை எதிர்த்து நின்ற மன்னன் படையைப் போன்ற மறப்படையைக் குறிப்பன என்று கருதுவது பொருத்த முடையதாகும். இன்னும், திருநாவுக்கரசரைத் துன்புறுத்தக் கருதிய அரசன், அவரை நீற்றறையி லிட்டான். அந் நீற்றறையின்