பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தமிழ் இன்பம்


கருத்துகளை உணர்த்தும் பெற்றி வாய்ந்த பழந்தமிழ்ச் சொற்கள் பண்டைப் பனுவலிற்பதிந்து கிடக்குமாயின் அவற்றை அகழ்ந்தெடுத்து வழக்காற்றில் உய்த்தல் வேண்டும். புதிய சொற்கள் வேண்டுமாயின், தமிழ்ச் சொல்லாக்க முறையறிந்து அவற்றைப் பிறப்பித்தல் வேண்டும். நல்ல நூல்களை மொழி பெயர்த்தும் நவீன நூல்களை இயற்றியும் மொழியின் கலைச் செல்வத்தைப் பெருக்க வேண்டும். இங்ஙனம் விரைந்து பணிசெய்ய முற்படாது, தமிழ்மொழியின் பழம்பெருமை பேசி மகிழ்வதாற் பயனில்லை. "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை". 'கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து, பண்ணுறத் தெரிந்தாய்ந்த பைந்தமிழ்' என்று பாராட்டுவதனால் தமிழ் மொழி பரவிவிட மாட்டாது. 'என்றுமுள தென்றமிழ்' என்று இறுமாந்து பேசுவதால் தமிழ்மொழி ஏற்றமுற மாட்டாது. 'சங்கத் திருப்பிலேயிருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை' என்று வாய்ப்பறை சாற்றுவதால் தமிழ்மொழி வளர்ந்துவிட மாட்டாது. தமிழ்மொழித் தொண்டு செய்யக் கருதும் தகை சான்ற அறிஞர் பழம் பெருமை பேசும் பழக்கத்தை விட்டொழித்து, தமிழ் மொழியின் குறைகளை அறிந்து, பணி செய்ய முற்பட வேண்டும். தமிழ் நாட்டிலமைந்த பல்கலைக் கழகங்கள் மேலை நாட்டுக் கலைகளை மொழி பெயர்க்கும் விழுமிய பணியை மேற்கொள்ள வேண்டும். தமிழன்னை மீண்டும் தலைசிறந்து விளங்கும் காலம் வருமோ என்று ஏங்கித் தளர்பவர் இந்நாளில் பலராவர். இங்ஙனம் தமிழ்ச் சேய்களிற் பலர் மயங்கித் தளர்ந்தாலும் தமிழ்த் தாய் மனம் தளரவில்லை; உரனிழந்த மக்கள் மனத்தைத் தேற்றுகின்றாள்; எத்திசையும் புகழ் மணக்க மீண்டும்