பக்கம்:தமிழின எழுச்சி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
ஒன்றிணைந்தால் அல்லது
தமிழினத்திற்கு உய்வில்லை!


இன்றைய தமிழினம் பல்வேறு வகைகளால் சிதறுண்டு கிடப்பது எல்லாருமுணர்ந்ததே. ஏற்கனவே உள்ள சாதி மதங்களாலும், அரசியல் கட்சிகளாலும், குமுகாயக் கொள்கைகளாலும், பொருளியல் ஏற்றத் தாழ்வுகளாலும் தமிழர்கள் ஒற்றுமையின்றிப் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றனர். அவர்களை ஒன்றிணைக்கும் பெரியதோர் இயற்கை ஆற்றலாகவுள்ள மொழி நிலையில் கூட ஓர் ஒருங்கிணைந்த போக்கு தமிழ் மக்களாகிய நம்மிடத்தில் இல்லை. பழைமையும், பெருமையும் நிறைந்ததாகிய நம் தமிழ்மொழியை வளர்ப்பதிலும் நமக்குள் பல வகையான கருத்து வேறுபாடுகள், கொள்கைப் போக்குகள் உள்ளன. இவ்வேறுபாடுகள் அனைத்தும் சேர்ந்து, மொழியை வளர்க்கின்ற - மொழிக்கு ஆக்கஞ் சேர்க்கின்ற ஓர் ஓங்கிய உணர்வாற்றலாக உருவெடுத்தாலும் நல்லது. ஆனால், அவ்வாறின்றி அக்கொள்கை கள்யாவும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாயும், ஒன்றையொன்று எதிர்த்து அழிப்பதாயும், ஒன்றுக்கு ஒன்றால் தாழ்ச்சி ஏற்படுத்திக் கொள்வதாயுமே இருக்கின்றன. இந் நிலைகளால் நம் இனிய தமிழ் மொழி நலிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டுமே கீழ்மையுறுவதை நம்மில் பலரும் உணர்ந்து கொள்வதில்லை . தமிழறிஞர்களும், அரசியல் ஊதியக்காரர்களும் தமிழ் மொழியைத் தங்கள் தங்கள் வாழ்வுக்கு ஒரு துணைக்கருவியாகவே கொண்டு இன அழிப்பு முயற்சிகளுக்குத் துணைபோகின்றனர். இதனால் மொழிக்கும் அதன் வழி இனத்திற்கான நலன்கள் ஏற்படுவதற்கு மாறாத தீங்குகளே ஏற்பட்டு வருகின்றன.