பக்கம்:தமிழின எழுச்சி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் • 143

கொள்கையை அச்சத்தினால் தூர வீசியெறிந்து விட்டோம். இனி, வருங்காலமோ, இத்தகையவர்கள் துணிவுகொள்ளவே முடியாத காலமாக இருக்கும்போல் தெரிகிறது. இந்திராகாந்தி, குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு அடிவகுத்துக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட நிலையில், இங்குள்ள, இன்றைய இனத்தலைவர்களும், அரசியல் தலைவர்களும் எப்படி நடந்துகொள்வார்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் தனித்தமிழ் நாட்டுக் கொள்கையைத் தவிர்த்து, மாநிலத் தன்னாட்சிக் கொள்கைக்கு எப்பொழுதே இறக்கம் காட்டிவிட்டனர். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இம்மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைத் தில்லி அரசுதான் நம்மிடம் ஒப்புரவுக்காகப் பேசவேண்டும். நாமாக இக்கொள்கையைப் பேசக்கூடாது. தில்லிக்காரர்கள் இந்த நாட்டின் நலங்கள் அனைத்திலும் வல்லாண்மை செலுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நாம் வெறும் மாநிலத்தன்னாட்சி பெற்று நிறைவடையும் நிலையில் இருக்கக்கூடாது. தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கைதான் நம் இனத்துக்கும், மக்கள் நலத்துக்கும் காப்பானது; சரியானது.

நாம் ஒன்றும் ஆளத் தெரியாத இனத்தைச் சேர்ந்தவர்களல்லர். ஆண்ட இனத்தவர்கள். அப்படிப்பட்டவர்கள், அரசியலிலும் பொருளியலிலும், குமுகாயநிலையிலும் இன்று அடிமைகளாகவும், ஏழைகளாகவும், இழிவானவர்களாகவும் ஆக்கப்பட்டிருக்கிறோம். ஒண்டவந்த இனம் ஊராள்கிறது. ஊராண்ட இனம் இன்று ஒண்ட இடம் கேட்கிறது: கோழைத்தனம் தவிர இதற்கு வேறு காரணம் இருக்கமுடியாது. இன்று நம் நாட்டில் உள்ள நம் தலைவர்களெல்லாரும், அரசியல் நடத்துகிறார்கள். அவர்கள் ஒரு நாளெல்லாம் பேசுகிற பேச்சிலும், எழுத்திலும், 50 விழுக்காடு எதிர்க்கட்சிகளைக் குற்றம் காண்பதிலும் குறை கூறுவதிலுமே கழிகிறது. 25 விழுக்காடு தில்லியரசுக்குச் சார்பாக இயங்கி அடுத்த தேர்தலில் தாம் ஆட்சிக்கு வரும் முயற்சிகளிலேயே கழிகிறது. மீதியுள்ளதில் 10 விழுக்காடு, தங்களுக்குக் கிடைக்கும் விளம்பர ஆரவாரங்களைப் பற்றியும், 10 விழுக்காடு தாங்கள் பதவியில் அமர்த்தப்பெற்றால் என்னென்ன செய்வோம் என்னும் கற்பனைக் கனவிலுமே கழிக்கின்றனர். மீதியுள்ள 5 விழுக்காடுதான் இந்நாட்டு மக்களைப் பற்றிப் பேசுகிறார்கள். (கணக்காசிரியர் யாராவது கணக்குப் போட்டுப் பார்க்கட்டும். அப்பொழுதுதான் நாம் சொல்வது உண்மையா, பொய்யா என்பது விளங்கும்.)

எதற்காக இவ்வளவு வருத்தமான செய்தியை, இவ்வாறு வெளிப்படையாகக் கூறுகிறோம் என்றால், இந் நாட்டின்நிலை அவ்வாறு