பக்கம்:தமிழின எழுச்சி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
கலைஞர்க்கு ஓர் இறுதி வேண்டுகோள்!
தமிழினத்தைக் காக்க வாருங்கள்.


பேரன்புடைய கலைஞர் அவர்களுக்கு,

வணக்கம், இது வரலாற்று நிலையில் நான் உங்களுக்கு எழுதும் மூன்றாவது மடல், ஆனால் இதுவே நான் உங்களுக்கு எழுதும் இறுதி மடலாகவும் இருக்கும். இறுதி என்பதற்கு எத்தனையோ பொருள்கள் இருக்கலாம். ஆனால், இந்த மடலிலுள்ள இறுதி என்னும் சொல்லுக்கு உள்ள பொருள் இனிமேல்தான் உங்களுக்கு விளங்கும்.

நான் உங்களை மூன்றுமுறை நேரில் சந்தித்து என் உள்ளக் கருத்துகளை, மிகவும் நெருக்கமாகவும் உருக்கமாகவும் உண்மையாகவும் உங்கட்குப் புலப்படுத்தியிருக்கின்றேன். தமிழ்நலமும் தமிழின நலமும் தமிழ்நாட்டு நலமும் நாடுகின்றவன் என்ற முறையில், உங்களிடம் இவ்வளவு வெளிப்படையாகவும் ஒளிவுமறைவு இன்றியும் உண்மைகளை எவரும் சொல்லியிருக்க முடியாது. இந்த மூன்று முறையில்லாமல், எத்தனையோ முறைகள் நாம் மேடையில் சந்தித்துக் கொண்டிருந்தாலும், அவற்றையெல்லாம் கணக்கிடாமல், இந்த மூன்று முறை என்று மட்டும் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், அந்த மூன்று முறைகள் மட்டுந்தாம் நானே உங்களைத் தேடிவந்து சந்தித்திருக்கின்றேன். அதுவும் மூன்று முகாமையான், தனிநலம் கருதாத செய்திகளுக்காகவே உங்களைச் சந்தித்திருக்கின்றேன் என்று உங்களுக்குக் தெரியும்.