பக்கம்:தமிழின எழுச்சி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

182 • தமிழின எழுச்சி

ஐவரிடம் மேலே கண்ட பதினான்கு தகுதி நிலைகளுள் பெரும்பாலானவை இருப்பதில்லை. இந்நிலைக்கு இவ்விளைஞர்களைக் குறை கூறிப் பயனில்லை. இவர்களின் அவல நிலைக்கு நம் நாட்டுக் குடும்ப அமைப்பே முதல் காரணமாக இருக்கிறது.

நம் நாட்டில் உள்ள கூட்டுக் குடும்ப அமைப்பு முறையும், சாதி அமைப்பு முறையும் தவறான, மூட மதக் கோட்பாடுகளுமே பொதுவுணர்வில் நாம் மேம்பட்டு முன்னேற முடியாமல் தடைக்கற்களாக உள்ளன. நம் கூட்டுக் குடும்ப அமைப்பில் ஒவ்வொருவருக்குமே குடும்பப் பொறுப்புகள் சுமைகள் அதிகம். ஒவ்வோரிளைஞரின் தோள்களிலும், அக் குடும்பத்தைத் தாங்கியாக வேண்டிய பெரும் பொறுப்புகள் சுமத்தப்படுகின்றன. அக் குடும்ப வளையத்தைவிட்டு, வெளியேறிக் குமுகாயத்தையும், நாட்டையும், உலகையும் பார்க்கின்ற பரந்து விரிகின்ற பார்வை, அவ்விளைஞர்க்குக் கட்டுப்படுத்தப் பெறுகின்றது; அல்லது மறைக்கப் பெறுகிறது; அல்லது, அறவே அகற்றப்பெறுகிறது. அக்குடும்ப வளையத்தைத் தாண்டிக் குமுகாயத்தைப் பார்ப்பதே அறமாகாது என்று தடுக்கப் பெறுகின்றது. 'ஊர் உலகம் எப்படிப் போனால் உனக்கென்ன? உன் குடும்பத்தைப் பார்; உன் மனைவி மக்களைப் பார்; உன் தாய் பசித்திருக்க ஊர்த் தாய்களைப் பற்றி நீயேன் கவலை கொள்கிறாய்? உனக்கேன் இந்த வீண்வேலை? ஊர், உலகத்தை நீதான் தாங்குகிறாயா? உன் வேலையைப் பார்த்துக் கொண்டு நீ போ என்று கூறிக் குடும்ப வளையத்தை விட்டு வெளியே வரத் துடிக்கும் ஓர் இளைஞரின் உணர்வை, முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றனர், அவரின் குடும்பத்தார். இந்த நிலையில் அவர் பொதுத் தொண்டுக்கு எப்படி வரமுடியும்? பொதுநிலையில் எப்படிச்சிந்திக்க முடியும்? பொதுவுணர்வுதான் எவ்வாறு தோன்றும்? இந்தக் குடும்பக் கட்டுகளை உடைத்துக் கொண்டு வெளியே வரத் துடிக்கும் ஆயிரத்தில் ஓரிரண்டு இளைஞர்களும், குடும்ப உறுப்பினர்களாலும் மனைவி மக்களாலும் சிதைக்கப்பட்டு விடுகின்றனர்; சீரழிக்கப்பட்டு விடுகின்றனர்.

இனி, இளைஞர்களுக்கு வரும் மனைவிமார்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உலக வரலாற்றிலேயே, பொது நிலையில் ஈடுபட்ட அறிஞர்களுக்கும் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் அவரவர் மனைவிமார்களே பெருத்த தொல்லைக் கூறுகளாக இருந்திருக்கின்றனர். பெரும் பெரும் வரலாற்றுப் புகழ் பெற்ற வீரர்கள், மெய்ப் பொருளாசிரியர்கள் கூட இந்த நிலைக்கு ஆளாகியிருப்பதை அவர்களின் வரலாறுகளைக் கூர்ந்து பார்ப்பவர்கள் நன்கு உணர முடியும். நம் வரலாற்று நிலைகளிலும் இக்கதைகள் உண்டு. இந்-