பக்கம்:தமிழின எழுச்சி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 195

தெரிவார்; இலெனினைவிட இனநலப் புரட்சியாளராகத் தென்படுவார்; இவ்விருபதாம் நூற்றாண்டில் நம் இன நலம் காக்க வந்த தந்தை பெரியாருக்குத் தந்தையாக விளங்குவார்!

அரம்பொருத பொன்போலத் தேயும், உரம்பொருது
உட்பகை உற்ற குடி, - (888)

'இரும்பைத் தேய்க்கின்றது அரம். அந்த இரும்பு போன்ற உறுதியும் உரனும் மிக்க இந்தத் தமிழ்க்குடியைத் தேய்க்கின்றது - அஃது தேய்ந்து அறுக்கத் தொடங்கியுள்ள நம்மிடையில் இருக்கும் உட்பகை. இவ் விரும்பு என்றேனும் ஒரு நாள் துகள் துகளாகச் சிதறிப் போவதைப் போல் இவ்வினமும் ஒருநாள் துண்டு துணுக்காகச் சிதறிப்போகுமே, ஐயோ' என்று கதறியழுகிறார், நம் இனநலம் காக்க வந்த அறிவுப் பேராசான், திருவள்ளுவர்.

இரும்பாம் நம் தமிழினம்! உட்பகை போன்ற அரத்தால் தேய்த்தழிக்கப் படுகிறதாம் இது! அன்றே தொடங்கியது இதன் அழிவு! அக்காலத்தில்தான் அவர் இவ்வின அழிவை உணர்ந்தார்! அவரால் கதறியழுதிருக்க இயலாது! புரட்சிக் குரல் கொடுக்க முடிந்திராது! தம் பெயரையும் வெளிப்படுத்த இயலாத புறப்பகையின் சூழ்ச்சியும் கொடுமையும் மிகுந்து வந்த காலம் அது? அக்காலத்தில்தான் வாழ்ந் திருந்து, இவ்வினமீட்சிக்காகக் குரல் கொடுத்தார், நம் பேராசான்! வேறு எந்த இனத்தவர்க்காகவும் அவர் இதனைக் கூறவில்லை . இவ்வேதுங்கெட்ட தமிழினத்துக்காகத்தான் குரல் கொடுத்தார் அந்த அறிவாசான்!

ஆனால், எங்கோ பல்லாயிரங் கற்களுக்கு அப்பால் பிறந்த மார்க்சின் குரல் நமக்குக் கேட்கிறது! எங்கெல்சு குரல் நமக்குக் கேட்கிறது! இலெனின் குரல் நமக்குக் கேட்கிறது! யார் யார் குரல்களோ நம் செவிகளில் விழுகின்றன! ஆனால் நமக்காகச் சிந்தித்த, நமக்காகஎச்சரித்த, நமக்காகவே வாழ்ந்த, நம் மண்ணில் தோன்றிய, இவ்வின நல மீட்பரின் குரல் நமக்குக் கேட்கவில்லையே! கேட்டாலும் பொருள் மாறி ஒலிக்கிறதே! அஃதென்ன கொடுமை! அதுதான் உட்பகையுற்ற குடியின் தன்மை! அந்த உட்பகையைத் தொலைத்தாலன்றி இவ்வினம் முன்னேறாது என்பது, அவ்வினநலப் பேராசான் நமக்குரைத்த நன்னெறி என்பதை நாம் அனைவரும் ஒருங்கே உணர வேண்டிய, உணர்ந்து ஒற்றுமைப் பட வேண்டிய காலம் இதுவே! செய்வோமா?


தென்மொழி சுவடி-23 ஓலை-3, பெப்-மார்ச்சு 1987