பக்கம்:தமிழின எழுச்சி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

216 - தமிழின எழுச்சி

பெறும் அமைச்சியல், மாபாரதத் துரியோதனர்க்கும், இராமாயண கோசலைக்கும் மறைவினின்று கரவின் ஓதப்பெற்ற சகுனியினதும், கூனியினதுமான நஞ்சு நெஞ்சின் வஞ்சனைக் கூறன்று; பழந்தூய பாண்டிய மரபின் வளந்தாங்கிய மக்கள் நலங்கேட்கும் இனந்தாங்கிய அறிவியல் சாறாகும் அது!

தமிழ்நூல்களில் வேறெந்நூல்களிலும் காணப் பெறாமல், திருக்குறளாகிய செம்பொருட் பனுவலில் மட்டுமே காணப்பெறும் குடியியல், தமிழின நலங் கருதியே கூறப்பெறும் மேன்மைக் கருத்து அடைவாகும் என்பதை எந்தத் தமிழருமே மறந்து போய்விட வேண்டா.

மேலும், திருக்குறளில் இன்பத்துப் பாலில் கூறப் பெறும் மனநல மும் அறிவு நலமும் உடல்நலமும் பொருந்திய மேம்பட்ட காதலியல் கருத்துகள், வாத்சாயனாரின் உடலுணர்வுப் பாலியல் கருத்துகளோடு தொடர்புடையன அல்ல. தமிழியல் தழுவிய இல்லறத்தின் அடிப்படைக் கூறாகவும், அவ்வினத்தின் பண்பியல் விளைவாகவும் துய்க்கப் பெறும் தூய தமிழ் இன்பியல் உணர்வுத் தொகுப்புகளாகும் அவை.

எனவே, தூயதமிழ் இனநலம் நோக்கியே கூறப்பெறும் திருவள்ளுவ வடிவங்களை வாழ்வின் வெற்றுணர்வுக் கூறுகளாகக் கருதிச், சடங்குகளாக வளர்த்துப் பருவான காட்சி வடிவிலோ, மத வழிபாட்டு வடிவிலோ, கொண்டு, உருவாகி வரும் இனநல உணர்வைச் சிதைத்து அழித்துவிட வேண்டாம் என்று திருக்குறள் தொடர்பாக இயங்கி வரும் அனைத்து அறிஞர்களையும், குழுவங்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். திருக்குறள் தமிழினம் காக்கத் தோன்றிய ஒரு பட்டய ஆவணப் பதிவு நூலே! வெறும் மறையென்று கூறி, அதை மக்களுக்கெட்டாத உயரத்தில் வைத்தோ, பொதுமறை என்று கூறி அதைத் தமிழின நலத்திற்குப் பயன்படாத வகையில் அவ்வினத்தினின்று பிரித்து அப்புறப்படுத்தியோ விட வேண்டா என்று அனைவரையும் வேண்டியும் கொள்கிறோம்!

தென்மொழி சுவடி - 25, ஓலை - 3, செப் - அக் 1989