பக்கம்:தமிழின எழுச்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 25

உலக மாந்தர் அனைவர்க்கும் பொதுவாக அறங்கூறும் திருவள்ளுவப் பெருந்தகை எங்கே? உயிர்க்குல வளர்ச்சிக்கும், துயர மீட்சிக்கும் அடிப்படைத் தொழிலாகிய உழவுத் தொழிலைக் கீழான தொழில் என்றும், இழிந்தோர் செய்வதென்றும், ஆரியர் இத்தொழிலை தீராத வறுமை வந்த விடத்தும் செய்தல் கூடாது என்றும், 'தர்மம்' கூறும் மநுவின் கீழ்க்கடை அறிவெங்கே? 'உழுவார் உலகத்தார்க் காணி' என்றும் 'உழவே தலை' என்றும் வகுத்துரைக்கும் அறச்செல்வர் திருவள்ளுவரின் உலகியலறிவெங்கே?

இனி, பொருட்பால், கௌடில்யரின் 'அர்த்த' சாத்திரத்தைத் தழுவியதென்பார்தம் கூற்றும் கடல் நீரில் வெண்ணெய் திரட்டியதாகக் கதையளக்கும் புல்லியர் தம் கூற்றே ஆம். அரசியலைக் கைப்பற்றச் சூழ்ச்சியொன்றே கைவாள் என்று பாரித்துரைக்கும் கௌடில்யனையும் அறமொன்றே அரசியல் என்று வலிந்துரைக்கும் திருவள்ளுவரையும் ஒரு துலையின் இருதட்டுகளில் வைத்தளப்பார்தம் கீழ்மையை என்னென்பது? அரசன் வலுவற்றிருக்கும் பொழுதே அவனை வெல்லுதற்கு எளிதான காலம் என்று கோழைமறங்கூறும் சாணக்கிய (கௌடில்ய) னின் குறுக்குவழி, 'கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தலினிது' என்று நேருக்குநேர் நின்று போர்புரியும் மறம் புகட்டும் திருவள்ளுவரின் நேரிய பேராண்மைக்கு முன் நிற்குமோ?

இனி, வாத்சாயனாரின் காமநூல் உரைக்கும் இழிந்த ஒழுகலாறுகளினின்று திருவள்ளுவர் இன்பத்துப்பாலைப் பிழிந்தார் என்று கட்டியுரைக்கும் முட்டறிவு வாய்ந்த முழுமக்களின் வாய்ப்பந்தரை எவ்வாறு ஒப்புக்கொள்வது? உடலுணர்வுகளால் பெண்டிரை வயப்படுத்தும் வாத்சாயனாரின் கழிகாமப் புரட்டுகளும், உள்ளவுணர்வுகளால் இல்லறத்தை மீமிசை மாந்தர்தம் வாழ்வியல் முறைகளாக வகுத்தளிக்கும் காதல் மேம்பாடுகளும் ஒன்றாமோ? விலைமகளிர் கூடங்களில் கற்பிக்கப் பெறும் பாடநூலாக விளங்கும் வாத்சாயனாரின் காம சூத்திரம்', திருவள்ளுவர் காட்டும் இல்லறவியலுக்குப் பொருந்து வதாமோ? அறிவோரே! கூறுமின்.

எனவே ஆரியப் பார்ப்பனர்தம் கட்டறுத்த கற்பனைநூல்களைவிட உலக மாந்தர் எல்லார்க்கும் சாலப் பொருந்துவதும், உலகியற் பூசல்களினின்று அவரை மீட்டுக் கொடுக்கும் தகுதி வாய்ந்ததும், உலக அறநூலறிஞர்கள் யாவரினும் மேலாக அறம் பயிற்றிய நடுநிலையாளரான திருவள்ளுவரை ஆசிரியராகக் கொண்டதுமான திருக்குறளைத் தமிழ்மக்கள் அனைவரும் தங்கள் தலைநூலாகக் கொள்ள வேண்டுவது விலக்கலாகாத கடமையாகும்.