பக்கம்:தமிழின எழுச்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38 - தமிழின எழுச்சி

பாடல் நூல்களிலும் மருத்துவ நூல்களாலும் வரைதுறையின்றி வட சொற்கள் மல்கி வருவதாலேயே அச்சித்தர்கள் எங்ஙன் ஆரியராகாரோ, அவ்வாறே அவர் நூல்களும் ஆரியக் கருத்துகள் தாங்கிய நூல்களாகிவிட முடியாது. எல்லாத் துறைகளையும் தம் கரவாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தியது போலவே மருத்துவத் துறையும் ஆரியப் பார்ப்பனரால் அன்றே வீழ்த்தப் பெற்றது. இன்றும் தமிழ் மருத்துவம் பயிலும் சித்த மருத்துவர் பலரும் ஆரிய அடிமைகளாகவே வாழ்க்கை நடத்தி வருவதைப்பார்க்க, தமிழன் இத்துறையிலும் - எத்துணையளவு போராட்டம் நடத்தியாக வேண்டியிருக்கின்றது என்பதை உண்மைத் தமிழன்பர்கள் கருத்தில் வைப்பார்களாக.

இனி, இத்தகைய சிறப்புப் பொருந்திய தமிழ் மருத்துவம் இன்று எந்த நிலையில் உள்ளது என்று அறிந்துகொள்ள வேண்டியதும், அதனை மேலும்மேலும் ஓங்கச் செய்து உலகெலாம் புகழ் மணக்கும்படி செய்வதும் தமிழன் ஒவ்வொருவனுடைய கடமையாகும். நடுவணரசைப் பொறுத்தவரை, சித்த மருத்துவத்திற்கென்று எந்தத் தனிச் சிறப்போ சலுகையோ கிடையாது. ஆயுர்வேதம், சித்தம், யூனானி ஆகிய மூன்றையும் இந்நாட்டின் பழமை பொருந்திய (Indigenous) மருத்துவங்களாகவே மதிக்கின்றனர். பெரும்பாலும் இம்மூன்று மருத்துவ முறைகளும் தமிழகத்தில்தான் மதிக்கப் பெறுகின்றன. சிறப்பு வாய்ந்த சித்த மருத்துவத்திற்கென்றே பல தனிக் கல்லூரிகள் தோன்ற வேண்டிய இன்றியமையாமையிருக்க இம்மூன்றையும் கலந்த கலவை மருத்துவம் போன்றதொரு மருத்துவ முறையைக் கற்பிக்கும் கல்லூரியே உள்ளது. அதுவும் ஒன்று அஃது இருப்பதும் தமிழகத்தின் தெற்கே நெல்லை மாவட்டத்தில் - பாளையங்கோட்டையில். 1964 முதற்கொண்டே இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது என்பதை எண்ணுகையிலும், இந்தியாவுக்கே இக்கல்லூரி ஒன்றுதான் என்று எண்ணுகையிலும் இக்கல்லூரியிலும் ஏராளமான மாணவர்கள் படிக்க முன்வந்தும் ஒவ்வோராண்டிற்கும் 30 மாணவர்களே சேர்த்துக் கொள்ளப் பெறுகின்றனர் என்று அறிகையிலும் தமிழ்க் கலைகள் எவ்வளவு தொலைவு புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்பதை அறியலாம்.

மேலும் ஆங்கில நாகரிகத்தின் போலிப் புனைவுகளாலும் ஆரவார விளம்பரங்களாலும் கவரப்பெற்ற இக்காலத்தில், ஆங்கில மருத்துவத்திற்கென்று தமிழகத்தில் ஒன்பது கல்லூரிகள் இருக்கின்றன. (சென்னை -3, செங்கற்பட்டு-1, தஞ்சை :-1, மதுரை-1, கோவை-1, நெல்லை 1, வேலூர் (தனியார் கல்லூரி) 1.