பக்கம்:தமிழின எழுச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

48 • தமிழின எழுச்சி

கொண்டு, நாற்றம் என்ற சொல்லுக்குத் தீநாற்றம் என்று எழுதினால் எப்படிப் பிழையோ அப்படிப்பிழை திருக்குறளுக்கு எல்லாரும் விருப் பத்தினாலே உரையெழுதுவது. பாவேந்தர் எப்படிப்பட்ட நிலையி லிருந்தவர்; எப்படிப்பட்ட உணர்ச்சியிலிருந்தவர் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த நிலையைக் கண்டித்து “இவர் இப்படி எழுதியிருக்க வேண்டாம்!” என்று அவர் காதுபடும்படிச் சொன்னவன் நான். எதற்கும் அஞ்சாதவன்! அதை அவர் விரும்பினார்; பாராட்டினார். அதே வழக்கு முறையை - எனக்கு என்னுடைய ஆசிரியராகிய பெருமைக்குரிய பாவாணரவர்கள் - அதே வழியைக் காட்டியிருக்கிறார். “யாருக்கும் அஞ்சாதே! உண்மையை எந்த இடத்திலுமே எடுத்துச் சொல்; எவர் முன்னிலையிலும் சொல்! உனக்கு உண்மையென்று படுவதைச் சொல்!" எனக்குச் சொல்லியிருக்கின்ற மந்திர மொழிகள் இவை! அதனாலே இதைச் சொல்லுகின்றேன். இந்த உரைநூல் முயற்சி அப்பொழுது தொடங்கி இப்பொழுது முடிவடைகிறது. இதற்குப்பின் எவராவது ஒருவர் திருக்குறளுக்கு உரையெழுத விரும்புவாரானால், அவர் உண்மையாகவே மிகவும் இரங்கத்தக்கவராகப் போய்விடுவார் என்பது என் கருத்து. இந்த உரை மிகச் செப்பமாக எழுதப்பட்டிருக்கிற ஓர் உரை. இறைவனுடைய கொள்கை - இறைக் கொள்கை அதில் இருக்கிறது என்பதற்காக இப்பொழுது பெரியார் வருத்தப்படலாம்; பேரா. சொக்கப்பனார் அவர்கள் வருத்தப்படலாம்; நீங்களும்கூட வருத்தப்படலாம். ஆனால் வள்ளுவர் காலத்தில் அஃது இருந்தது; வள்ளுவருக்கும் உடன்பாடாக இருந்தது என்பதை நாம் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டுமே தவிர; இன்றைக்கு ஒரு பெரியார் பிறப்பார்; அவர் விரும்பும்படி நாம் ஒரு நூலை எழுதவேண்டும் என்று அன்று திருக்குறள் எழுந்துவிட வில்லை ; திருவள்ளுவர் அதை எழுதிவிட வில்லை . புலவர் குழந்தை அவர்கள் நூலிலே “செயற்கரிய செய்வர் பெரியர்” என்ற அந்தக் குறளுக்கு உரையாக, “செயற்கரிய செய்வர் பெரியர் - நம்முடைய பெரியாரைப்போல” என்று உவமை காட்டிச் சொல்லியிருக்கின்றார். அதெல்லாம் விருப்பு வெறுப்புகளை உரை நூலிலே காட்டியதாகும். உரைநூல் எழுதுகிறவர் நூலாசிரியரைப் போலப் பொதுவான நோக்கு வைத்துச் செய்யவேண்டும். நான் அவரைத் தாக்கவேண்டும், அவரைப் பற்றித் தப்பான நோக்கத்துடன் சொல்ல வேண்டும், என்று சொல்லவில்லை.

பாவாணர் அவர்களின் அறிவு, இன்றைய நிலையிலே இங்கு பயன்படக்கூடிய அறிவு, நமக்கெல்லாம் தேவையான அறிவு; எதிர் காலத்திலே எல்லாரும் வியந்து பாராட்டக்கூடிய அறிவு, அவ்வளவு சிறந்த நுண்மாண் நுழைபுலம்! மறைமலையடிகளாரே பாராட்டி