பக்கம்:தமிழின எழுச்சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

58 • தமிழின எழுச்சி

நலன்கள் முற்றும் மாணவரைப் பொறுத்த செய்தியேயாகும். அதில் அரசினர் உள்ளிட்ட பிறர் யாவரும் நேர்மையாக நடந்துகொள்வர் என்று நம்புவதற்கில்லை. நம் ஆட்சித் தலைவர்கள் அத்துணைத் தன்மானம் உள்ளோரும் அல்லர். நடுவணரசினர் போக்கும் பாழியினரைப் புறக்கணித்துப் புதுவை மக்களின் நலத்திலேயே கண்ணூன்றிவிடும் என்று எதிர்பார்ப்பதும் நம் பேதைமையே. எனவே தங்கள் தன்மானத்திற்கும் எதிர்கால வாழ்வு நலன்களுக்கும் கட்டியங்கூறி வீறுகொண்டு எழுந்து போராடும் மாணவர்களின் செயல் நமக்கு எவ்வகையிலும் வியப்பளிக்கவில்லை . அவர்களின் நேர்மையானதும், மிக எளிதாகத் தீர்த்து வைக்கப் பெற இயல்வதுமான இக் கோரிக்கையை அரசினர் அணுகும் முறைதான் நமக்கு வியப்பளிக்கிறது. அரவிந்தர் பெயர் வைக்கப் பெறுவதை 'மாணவர்கள் விரும்பவில்லையானால் பல்கலைக் கழகமே வராது' என்று ஆளுநர் கூறினாராம். அந்தப் பெயரில் ஆளுநர்க்கென்ன அவ்வளவு கவர்ச்சி என்பது நமக்குப் புரியவில்லை. 'இந்திரா காந்தியும் அரவிந்தரைத்தாம் விரும்புகிறாராம்’ - இப்படிச் சொல்லியிருக்கின்றார் அமைச்சர் ஒருவர். அஃது இந்திரா காந்தியின் தனிப்பட்ட செய்தி. அவருக்கிருக்கும் விருப்பத்திற்காக மக்களுக்கு வேண்டிய ஒரு பல்கலைக்கழகத்தை அரவிந்தரின் புதைமேடை(சமாதி)யில் கொண்டுபோய் வைக்கும் ஒரு படையல் பொருளாகக் கருதிவிடக்கூடாது என்பதே நம் போன்றவர்களின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும்.

“புதுவை என்றாலே அரவிந்தர் பாழிதான்” என்று உலகினர் எல்லாரும் நினைத்தல் வேண்டும் என்பதில் பாழியினர் மிகவும் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருப்பதைத் தாங்கள் நன்றாகப் புரிந்து கொண்ட பின்னும், மாணவர்கள் போராடி நிற்கும் இவ்விக்கட்டான நிலையில் அவர்கட்குத் துணைபோகாத புதுவை மக்களை எண்ணி நாம் வெட்கப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே நடுவணரசுச் சார்பில் உள்ள புதுவைப் பள்ளிகள் சிலவற்றில் சமற்கிருதமும், இந்தியும், ஆங்கிலமுமே பயிற்றுவிக்கப் பெற்றுவருகின்றன. இப்பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பெற்றாலும் அந்த நிலைதான் பெரும்பாலும் தொடர்ந்து நிற்கும். அத்துடன் பாழியினரின் சார்பில் ஏற்கெனவே உள்ள The International Education Centre என்னும் உலகக் கல்விக் கழகமும் இப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பெற்று, இந்த இணைப்பின் வழி பாழியினரின் வல்லாண்மைமுறையே இங்கும் பாய்ந்தோட வழி வகுக்கலாம். எவர் விளைவித்தாலும் அறுத்தாலும் தமக்குரிய அரசியல் பங்குகள் குறைவு படாமலிருக்கின்றனவா என்னும் தன்னல நோக்கிலேயே,-