பக்கம்:தமிழின எழுச்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
காட்டிக் கொடுப்பான்கள்!


ஓரினம் முன்னேறுகையில் எத்தனையோ சறுக்கல்கள் இருக்கும்; இழுப்புப்பறிப்புகள் இருக்கும்; வீழ்ச்சிகள் இருக்கும்; குழி தோண்டுதல்கள் இருக்கும்; போட்டி, பொறாமைகள் இருக்கும். இவையெல்லாம் ஓரினம் தனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்ளும் பூசல்களாகக் கருத இடமுண்டு. ஆனால் எந்த இனத்தில் காட்டிக் கொடுப்புகள் மிகுதியும் உள்ளதோ அந்த இனம் என்றும் தன் அடிமைத்தனத்திலிருந்து மீளுவதே இல்லை. மாறாக, உலகச் சுவட்டிலிருந்து அது மாய்ந்து போகவும் நெடுங்காலம் ஆகாது. ஏனெனில் இனத்துக்கு ஏற்படுகின்ற பூசல்களில் எல்லாம், காட்டிக் கொடுப்பே தலையாய பூசலாகும். அஃது ஒரு தற்கொலை முயற்சியாகும். இதுவே உட்பகையாகும். நேரடியான புறப்பகைக்குத் துணையாக இருக்கும் நிகழ்ச்சியும் இதுவே. புறப்பகையைவிட இது கொடியதுமாகும். இந்தக் காட்டிக் கொடுப்பை எதிர் பார்த்துத்தான் பகைவன் அவ்வினத்தை அல்லது அரசை ஒழிக்க நேரம் பார்த்திருப்பான். எனவே பகைவனிடத்தில் காட்டிக் கொடுப்பான்களுக்கு நல்ல மதிப்பிருக்கும். நல்ல ஊதியமும் கிடைக்கும். ஓர் அரசையோ நாட்டையோ உள்ளிருந்து வீழ்த்தும் ஆறு தீமைகளுள் உட்பகையே திருவள்ளுவரால் முதலாகச் சுட்டப் பெறுகின்றது. அதனையடுத்து ஐந்து தீமைகள் பெரியயோரைப் பிழைத்தல், பெண்வழிச் சேர்தல், வரைவின் மகளிர், கள்ளுண்ணல், சூது ஆகியன.

திருவள்ளுவர் உட்பகையைப் பற்றிக் கூறும் கருத்துகள் இக்கால் நின்று நினைக்கத்தக்கன. நிழலில் உள்ள நீர் முன்பு இனியதாக விருந்து பின்பு இன்னாததாக விருப்பதுபோல், நம் நிழலில் உள்ள உட்பகைவனும் முன்பு இனியவனாக இருந்து பின்பு இன்னாதவனாய் இருப்-