பக்கம்:தமிழின எழுச்சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

72 • தமிழின எழுச்சி

ஆண்டையிடம் போய் உன்னவனைப் பற்றிச் சொல்கின்றாயே; அவன் உன் தலைவனை மட்டுமா சீவுவான்? உன் தலையையுமன்றோ சீவுவான். உனக்கென்ன அப்படிக் கொம்பா முளைத்திருக்கின்றது, உன் தலையைச் சீவாமல் விடுவதற்கு!

உனக்கும் சொல்வேன்; உன் பெயரனுக்கும் இதைச் சொல். நாம் முன்னேற வேண்டியவர்கள்; வரலாறு படைத்தவர்கள். நேற்று நினைவற்றுக் கிடந்திருக்கிறோம். இன்று நினைவு வந்து எழுந்து நடக்கின்றோம். இனி, ஓடவும் வேண்டும். அதற்குள் உன் முன்னால் போகின்ற உன்னவனின் குதிக்காலை நீ ஏன் வெட்டவேண்டும்? எண்ணிப்பார். நீயும் அவனும் சேர்ந்திருந்த நாட்களை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்து பார்! அவன் உனக்கு என்னென்ன நலன்களைச் செய்திருக்கின்றான்? அவன் தோளைப் பிடித்து எத்தனை முறை நீ தொங்கியிருக்கின்றாய்? அவன் காலைப் பிடித்துக்கொண்டு எத்தனை முறை நீ கதறியிருக்கின்றாய்? அவன் காதோடு வாய்வைத்து நீ பேசிய கமுக்கச் செய்திகள் எத்தனை? நம் பகைப் புலத்தைக் குறிவைத்துத் தாக்க நீங்கள் இருவரும் போட்ட திட்டங்கள் உனக்கு மறந்து போயிருக்க வழியில்லை. அதற்குள் நீ பகைவனின் பாசறைக்குள் முன்புறமாக அன்று பின்புறமாக நுழைந்துவிட்டாய். நுழைந்ததுமன்றி அவனோடு சேர்ந்து நீ அடித்த கூத்துகளையெல்லாம் அவன் ஒருவனே ஆடியதாக வேறு இட்டுக்கட்டிச் சொல்கின்றாய். எத்துணை துணிவு உனக்கு! எத்துணை ஈவு இரக்க மற்ற நெஞ்சம் உனக்கு! எத்துணையளவு உன் உள்ளத்தில் விரிசல் கண்டிருக்க வேண்டும்! ஒரு நொடி எண்ணிப் பார்! நீ செய்த செயலுக்கு - செய்துவரும் அரசியல் பேரத்திற்கு - என்ன பெயர் கொடுக்கலாம்? உட்பகை என்பது என்ன? 'காட்டிக் கொடுப்பது' என்பதைப்பற்றிக் கதையில் படித்திருப்பாய். நாடகமாடிக் காட்டிக் கொடுப்பது இதைவிட வேறு எப்படியிருக்கும்? அச்செயலை எவர் செய்தாலும், எங்கிருந்து செய்தாலும், எந்தச் சூழலில் செய்தாலும் அதற்கு ஒரே பெயர்தான். காட்டிக்கொடுப்பது! அதைச் செய்பவன் காட்டிக் கொடுப்பவன். அவன்தான் உட்பகைவன்! அந்தப் பகைவன் என்றைக்குத் தமிழினத்தினின்று அகற்றப் பெறுவானோ, அன்றைக்குத் தான் இந்நாடு முன்னேற்றப் பாதையில் கால் வைத்ததாகக் கூறமுடியும்! ஓ! நல்லவனே! உன்போல் எத்தனைப் பெயர்கள் உள்ளனர்; அவர்களும் உன் அருகிலேயே மிக அருகிலேயே, அவர்களின் செயல் - உன்னளவில் - நாளை நடைபெறலாம். எனவே, நீயாகிலும் எச்சரிக்கையாக இரு! தமிழின முன்னேற்றம் உன்னிலிருந்தாகிலும் தொடங்கட்டும். நீயாவது எங்கள் முன்னோடியாய் இரு; நழுவி விடாதே!

தென்மொழி