இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நல்வினை !
தமிழ்நாட்டில், நம் தமிழ் பல துறைகளிலும் தாழ்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துறைகளில் சிலவற்றையே இதில் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
மற்றும் சில துறைகள் பின்னர் ஆகட்டும். இதை நான் எழுதியதன் நோக்கம் என்ன எனில், தமிழார்வம் மிக்க இளைஞர்கள் இத்தகைய துறைகளில் தமிழ் முன்னேற்றம் கருதி இயன்றவாறு கிளர்ச்சி செய்ய வேண்டும் என்பதுதான்.
ஓர் கூட்டம், கோயிலில் பிறமொழிக் கூச்சலைத் தடுக்க ஏன் முயலலாகாது? ஒரு குழுவினர் தெருத்தோறும் சென்று பிறமொழி விளம்பரப் பலகையை மாற்றியமைக்கச் சொல்லி- ஏன் வற்புறுத்தலாகாது? மற்றும் பலவகையினும் கிளர்ச்சி செய்யின், தமிழ் விடுபடும். தமிழ் நாடு விடுபடும். எவ்விணையினும் “இஃதன்றோ இந்நாள் இன்றியமையாத நல்வினை ?
—பாரதிதாசன்