இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
தமிழியக்கம்
கூத்தர் பலர் தமக்குள்ள
தமிழ்ப்பேரை நீக்கிவிட்டுக்
கொள்கை விட்டுச்
சாத்திக் கொள் கின்றார்கள்
வடமொழிப்பேர்! இந்திப்பேர்!
அவற்றி லெல்லாம்
வாய்த்திருக்கும் தாழ்வறியார்
புதி தென்றால் நஞ்சினையும்
மகிழ்ந்துண்பாரோ?
தாய்த்திருநா டுயர்வெய்தும்
நாள் எந்நாள்? தமிழுயரும்
நாள் எந் நாளோ? 89
என்னருமைத் தமிழ்நாட்டை
எழிற்றமிழால் நுகரேனோ?
செவியில் யாண்டும்
கன்னல்நிகர் தமிழிசையே
கேளேனோ? கண்ணெதிரில்
காண்ப வெல்லாம்
தன்னேரில் லாத தமிழ்த்
தனிமொழியாய்க் காணேனோ?
இவ்வை யத்தில்
முன்னேறும் மொழிகளிலே
தமிழ்மொழியும் ஒன்றெனவே
மொழியே னோநான் ! 90