இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44
தமிழியக்கம்
தொண்டர்படை ஒன்றமைத்துத்
தமிழ் எதிர்ப்போர் தொடர்ந்தெழுதும்
ஏட்டை யெல்லாம்
கண்டறிந்தபடி அவற்றை
மக்களெலாம் மறுக்கும்வணம்
கழற வேண்டும்.
வண்டுதொடர் மலர்போலே
மக்கள்தொடர் ஏடுபல
தோன்றும் வண்ணம்
மண்டுதொகை திரட்டி,அதை
ஏடெழுத வல்லார்பால்
நல்க வேண்டும்! 109
ஆங்கிலத்துச் செய்தித்தாள்
அந்தமிழின் சீர்காக்க
எழுதல் வேண்டும்
தீங்கற்ற திரவிடநன்
மொழிகளிலே பலதாள்கள்
எழுதல் வேண்டும்,
ஓங்கிடநாம் உயர்முறையில்
நாடோறும் கிழமைதொறும்
திங்கள் தோறும்
மாங்காட்டுக் குயிலினம்போல்
பறந்திடவேண்டும் தமிழ்த்தாள்
வண்ணம் பாடி! 110