௨௩. பெருஞ்செல்வர்
கோயில்பல கட்டுகின்றீர்
குளங்கள்பல வெட்டுகின்றீர் !
கோடை நாளில்
வாயிலுற நீர்ப்பந்தல்
மாடுரிஞ்ச நெடுந்தறிகள்
வாய்ப்பச் செய்தீர்
தாயினும்பன் மடங்கான
அன்போடு மக்கள்நலம்
தாவு கின்றீர்
ஆயினும்நம் தமிழ்நாட்டில்
செயத்தக்க தின்னதென
அறிகி லீரே. 11
தமிழுயர்ந்தால் தமிழ்நாடு
தானுயரும் அறிவுயரும்
அறமும் ஓங்கும்
இமயமலை போலுயர்ந்த
ஒருநாடும் தன்மொழியில்
தாழ்ந்தால் வீழும்
தமிழுக்குப் பொருள்கொடுங்கள்
தமிழறிஞர் கழகங்கள்
நிறுவி டுங்கள்,
தமிழ்ப்பள்ளிக் கல்லூரி
தமிழ்ஏடு பலப்பலவும்
நிலைப்பச் செய்வீர்! 112
நேர்மையின்றிப் பிறர்பொருளில்
தம்பெயரால் கல்லூரி
நிறுவிப் பெண்ணைச்
சீர்கெடுத்தும் மறைவழியாய்ச்
செல்வத்தை மிகவளைத்தும்
குடிகெ டுத்தும்
பார்அறியத் தாம்அடைந்த
பழியனைத்தும் மறைவதற்குப்
பார்ப்பான் காலில்
வேர் அறுந்த நெடுமரம்போல்
வீழ்ந்தும் அவன் விட்டதுவே
வழியாம் என்றும் 113