பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்னுரை

தமிழிலக்கியக் குறியீடுகள் அகராதி என்னும் இந்நூல் 2003-2006 ஆண்டுகளில் புதுதில்லி பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதிநல்கையுடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் செய்யப்பெற்ற திட்டமாகும். இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றிய திருமதி ஜெ. சரஸ்வதி தமிழிலக்கியக் குறியீடுகள் என்ற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக முனைவர் பட்ட ஆய்விலும் பின்பு ஈடுபட்டார்.

குறியீடு பற்றிய கல்வி சுவையானது. சிக்கலா னதும் கூட தெளிவுடையதாகத் தோன்றினாலும் வெளிப்படையாகாதது. எவ்வளவோ தேடினாலும் இன்னும் தேட வேண்டியதை முன்னுணர்த்துவது. மொழிக்கு உட்பட்டுப் புலப்பட்டாலும் சொல்லுக்கு அப்பாற்பட்டு அப்பாலைக்கு அப்பாலாகிக் குறிப்புக் காட்டுவது. இயற்கையின் பல கூறுகளிலும் கலந்து கிடப்பது. மனித வாழ்வியலின் பேச்சிலும் செயற்பாட்டிலும் பன்முகம் காட்டி வெளிப்படுவது. இலக்கியம், கலை எனப் பல துறைகளிலும் பரந்து நிற்பது, காணவும் உணரவும் சுவைக்கவும்பட வாய்ப்புத் தருவது; அறிந்து கொளற்கு ஏது வானது.

ஆங்கில முதுகலை கற்ற காலத்தில் இலக்கியத் திறனாய்வின் போக்குகளாக உளவியில் பார்வையும் குறியீட்டியல் நோக்கும் அறிமுகமான போது, தமிழில் இத்தகு தேடலின் களம் பிடிபட்டது. காலப்போக்கில் சில ஆய்வரங்கக் கட்டுரைகள், சொற்பொழிவுகள் என இது வெளிப்பட்டது. ஆங்கிலத்திலமைந்த பல குறியீட்டு அகராதிகளும், விவிலியப் பொழிவுகளில் அறிந்து புரிந்த குறியீட்டாழங்களும்,தமிழுக்கும் இத்தகு பார்வையைப் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தின. எனினும் இத்தகு அகராதி உருவாக்கம் வாய்ப்பு இந்தப் பல்கலைக் கழக நிதிநல்கையின் பெருந்திட்டம் வாயிலாகவே அமைந்தது; இக்குழுவுக்கும்,அதன் தலைமையி னர்க்கும், தேர்வுக்குழுவிலமைந்த பேராசிரியப் பெருமக்கட்கும் நன்றி நவில்வேன்.

இதற்காக விண்ணப்பிக்கக் களமமைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர் முனைவர் சா. கிருட்டினமூர்த்தி அவர் களுக்கும்; திட்டம் நிறைவு செய்தளித்த அப்போ தைய இயக்குநர் முனைவர் ம.இராசேந்திரன் அவர்களுக்கும் எம் நன்றி உரித்து.

தமிழிலக்கியக் களன் முழுவதையும் கண்டு, 10,000 தலைச்சொற்களுடன் 500 பக்க அளவில் இத்தமிழிலக்கியக் குறியீடுகள் அகராதியை அமைக்க வேண்டும் என முன்கருதிய போதும், தொல்காப்பியம் முதல், கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரையான தமிழ்ப் படைப்புகளை மட்டுமே களனாகக் கொண்டு, அக்காரம்தொடங்கி வைரம் ஈறாக ஏறத்தாழ 1040 தலைச்சொற்களும் இணைச் சொற்களாக சுமார் 1085உம் இதில் அமைக்கப்பட்டு ள்ளன.

தொடக்க முயற்சியாகச் செய்யப்பெற்றுள்ள இவ்வகராதி ஒரு வரைவு மட்டுமேயாகும். ஒவ்வொரு குறியீடும் அதன் பொருளுடனும் சான்று வருகையுடனும் அமைக்கப்பட்டுள்ளது. எனினும், உறவும் தொடர்பும் பொருத்தமும்

vi