பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல் -இன் று

127


கதிரியக்கப் பாஸ்வரமும், கதிரியக்க அயோடினும் கரைசல் நிலையில் பூமிக்கு அடியில் செல்லும் நீர்க்குழாய்களில் ஒழுக்குகள் அல்லது உடைவுகள் நேரிட்டிருக்கும் இடங்களை அதிக மண்ணைத் தோண்டாது நேராகக் கண்டறிந்து விடலாம். தரையின்கீழுள்ள ஊற்றுநீரைப் பரிசோதித்து அதன் வயதையும் அதில் எவ்வளவு பகுதி மழையின் மூலம் வருகின்றது என்பதையும் இம்முறையில் கண்டறியலாம். கதிரியக்கக் கோபால்ட்டைக் கொண்டு பூமிக் கடியில் எண்ணெய்க் குழல்கள் செல்லும் வழிகளும் அவற்றில் நேரிடும் அடைப்புகளும் கண்டறியப் பெறுகின்றன. இத்துறையில் கதிரியக்கக் குளோரினும் கதிரியக்கக் கால்சியமும் பூமியின் அடியிலுள்ள பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ளப் பயன்படுகின்றன. பூமியின் அடியிலுள்ள எண்ணெய் ஊற்றுகளையும் கண்டறிய முடிகின்றது. மேல் நாடுகளில் குழாய் வழியாகச் செலுத்தப்பெறும் தபால் பைகளில் கதிரியக்கக் கோபால்ட்டை ஒட்டி வைத்து அவை நடுவில் சிக்கிக் கொள்ளும் பொழுது கைகர் எண் கருவிகொண்டு அவற்றைக் கண்டறிகின்றனர். இத்தகைய செயல்களில் கதிரியக்க அணுக்கள் மாயக்கண்போல் (Magic eye) செயற்படுகின்றன.

கொலை, களவு போன்ற குற்றங்களைக் கண்டறிவதிலும் கதிரியக்க ஓரிடத் தான்கள் துணைபுரியத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவிலுள்ள ஊர்க்காவல் துறை இவற்றைப் பயன்படுத்துகின்றது. சில வைரவியாபாரிகள் விலையுயர்ந்த கற்களுடன் கதிரியக்க ஐசோடோப்புகளை இணைத்து வைக்கின்றனர். அவை களவு போனால் இந்த ஐசோடோப்புகள் மூலம் அவற்றைக் கண்டு பிடிப்பது எளிதாகின்றது.

பொறிகளை இயக்குபவர்களுக்கு அடிக்கடி நேரிடும் விபத்துகளைப் பாதுகாக்கும் அமைப்பிலும் கதிரியக்க ஐசோடோப்பு பயன்படுகின்றது. பொறியினை இயக்குபவர் சிறிது கதிரியக்கமுள்ள கங்கணம் போன்ற ஒரு பட்டியைத் தம் கையில் கட்டிக் கொள்வார். பொறியில் கதிர் வீச்சினைக் கண்டறியும் கைகர் எண்-கருவி போன்ற அமைப்பொன்று பொருத்தப் பெற்றிருக்கும். கை விபத்துக்கு உள்ளாகும் எல்லைக்கு வருங்கால் கையில்