பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல் - இன்று

135


ஆகியவை பற்றிய விரிவான விவரங்கள் மிக மிகத் தேவை. வளி மண்டலத்தின் திண்மையான அடிப்பகுதியிலுள்ள நாம் இவற்றால் ஏற்படும் இடர்ப்பாடுகளினின்றும் தவிர்க்கப் பெறுகின்றோம். விண்வெளி ஊர்திகளில் செல்வோருக்கு இத்தகைய தொரு பாதுகாப்பு இராது.

இன்று அறிவியலறிஞர்கள் வளி மண்டலத்தை ஐக்து அடுக்குகளாகப் பிரித்து அவற்றிற்குத் தனித்தனித் துறைப் பெயர்களிட்டு வழங்குகின்றனர். பூமியையொட்டி மேல் செல்லச் செல்ல இவை அடி வளி மண்டலம் (Troposphere), அடுக்கு வளி மண்டலம் (Stratosphere), வேதியியல் மண்டலம் (Chemisphere), அயனி மண்டலம் (Inosphere), புரவளி மண்டலம் (Exosphere) என்ற வரிசையில் அமைந்துள்ளன. இவற்றின் தன்மைகள் "தொலை உலகச் செலவு" என்ற என் நூலில் விரிவாக விளக்கப் பெற்றுள்ளன.13 அயனி மண்டலத்திற்கும் புறவளி மண்டலத்திற்கும் இடையிலுள்ள பகுதியில்தான் வானநூல் அறிஞர்களும் இராக்கெட்டுப் பொறிஞர்களும் சிறப்பாகக் கவனம் செலுத்துகின்றனர். துணைக் கோள்கள் இப்பகுதியைக் கடந்து செல்வதில் தடைகள் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இப்பகுதிக்கு அப்பால் காற்றின் தடையே முற்றிலும் இல்லையாதலால் அதிகமான பிரச்சினைகள் எழுவதில்லை.

பூமியினின்றும் மேலே செல்லச் செல்ல காற்றின் திண்மை குறைந்து வருகின்றது. கடல் மட்டத்திற்குப் 16 கி.மீ. உயரத்தில் அது பத்தில் ஒரு பங்காகி விடுகின்றது; 32 கி.மீ. உயரத்தில் அது கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்காகி விடுகின்றது. 48 கி.மீ. உயரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காகி விடுகின்றது. இங்ஙனம் திண்மை படிப்படியாகக் குறைந்து கொண்டே சென்று 112 கி.மீ. உயரத்தில் அஃகு இலட்சத்தில் ஒரு பங்காகி விடுகின்றது. 3000 கி.மீ.க்கு மேல் மூச்சு விடுவதற்குக் கடினமாக உள்ளது. ஆறாயிரம் கி.மீட்டருக்கு மேல் பயணம் செய்வோர் உயிரியம் (Oxygen) கொண்ட அமைப்புகளைக் கொண்டு செல்ல வேண்டும். துணைக்கோள் செல்லுவதற்கு உயிரியம் தேவைப்படாதாகையால் அது காற்றே இல்லாத விண்வெளியில் செல்லுகின்றது.


13. தொலை உலகச் செலவு (கழக வெளியீடு)-பக் 10-15.