பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


அந்த வம்சத்தின் தலைவனான சூரியனுக்கும் இப்பேறு கிட்டுவதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோமன்றோ?

7. விண்வெளியியல்

வான இயலை ஒரளவு பருந்து நோக்காகக் கண்ட நமக்கு விண்வெளியியல் சற்றுத் தெளிவாகப் புலனாகும் எனக் கருதுகின்றேன். இஃது மிகப் பெரிய பகுதி. இரண்டு பொழிவுகளில் கூட விளக்குவது அருமை. எனினும் சுருக்கமாக எடுத்துக் கூற முயல்கின்றேன்.

நாம் வாழும் பூமி விண்வெளியில் மிதந்து கொண்டுள்ளது. அது தன் அச்சினின்றும் திரும்புங்கால் அதன் ஒரு பகுதி கடும் வெப்பத் தன்மையுடைய கதிரவனின் கருணையற்ற கதிர்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றது; அந்த வெப்பம் பூமியில் வாழும் உயிரினங்களை வாட்டி வதக்கிச் சாம்பலாக்கிவிடும். மற்றொரு பகுதி மிகக் கடுங்குளிரின் தாக்குதலுக்கு இலக்காகின்றது; அந்நிலை உயிரினங்களைப் பனிக் கட்டி போல் உறையச் செய்துவிடும். ஆயினும், உயிரினங்கள் அந்த இரண்டு வித தாக்குதலுக்கும் இலக்காவதில்லை. இங்ஙனம் நிகழாததன் காரணம் நம்மைச் சுற்றிலும் பரவியுள்ள வளிமண்டலமே (Atmosphere) ஆகும். அஃது ஒரு அரிய காப்புறையாக அமைந்து இவ்விபத்துகளைத் தவிர்க்கின்றது. இந்தக் காற்று: மண்டலத்தைப் பற்றி நாம் ஒரளவு அறிவோம். ஆயினும், விண்வெளிப் பயணிகள் இதனைப்பற்றி நன்றாக, விரிவாக, தெளிவாக அறிய வேண்டுவது மிகவும் இன்றியமையாதது. அதிலும் முக்கியமாக 480 கி.மீ. உயரத்திற்கு அப்பால்-புறவெளியின் எல்லையில்-நிகழும் நிலைமைகளைப் பற்றிய எண்ணற்றத் தகவல்களையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

இந்தக் காற்றுக் கடலின் மிக்க உயரத்தில் வீசும் காற்றுகள், இதன் பல்வேறு வெப்பநிலை மாறுபாடுகள், பல்வேறு அடுக்குகளில் இதன் திண்மை, இதன் மின்-நிலை மாற்றங்கள், வேதியியல் நிலை மாற்றங்கள் ஆகிய இவற்றைப் பற்றிய, எல்லாத் தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், கதிரவன் காலும் புற-ஊதாக் கதிர்கள், அண்டக் கதிர்கள் (Cosmic rays),விடாது மழைபோல் விழும் விண்கற்கள் (Meteors)