பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

132


பெரிய கொட்டைப் பாக்காகவும், புளுட்டோ நான்கு கி.மீ.க்குத் சற்று அதிகமான தொலைவில் 44 மி.மீ.க்குச் சற்றுப் பெரிய குறுக்களவுள்ள ஒரு பட்டாணியாகவும் கருதலாம்.

இன்று நாம் கோள்களைப்பற்றி அறிந்துள்ள தகவல்கள் குறைவு என்று கூறுவதற்கில்லை. ஆயின், நாம் இன்னும் அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவற்றை நோக்க நாம் "கற்றது கைம்மண் அளவு: கல்லாதது உலக அளவு” ஆகும்.

மேற்கூறிய கோள்களுள் புதன், வியாழன் என்ற கோள்கள் மட்டிலும் கதிரவனைத் தன்னந் தனியாகச் சுற்றி வருகின்றன. ஏனையவை தம்முடைய சிறு சிறு குடும்பங்களுடன் வலம் வருகின்றன. இவை யாவும் "பயபக்தியுடன்" கதிரவனை ஒழுங்காக வலம் வருகின்றன. ஆனால் பகலவனை வலம் வரும் சிறு கோளத்திரள்கள் ஒர் ஒழுங்கில் சுற்றி வரவில்லை. இவற்றுள் சில கதிரவனைத் தொட்டு விடுவனபோல மிக அண்மையில் வருகின்றன; சில அவை இருக்குமிடம் அறியாவண்ணம் மிகச் சேய்மையில் ஒடுகின்றன.

இவற்றைத் தவிர வால்மீன்கள் (Comets) என்ற ஒரு பெருங்கூட்டமும் பகலவனை வலம் வருகின்றன. இவை நியதியற்ற நீள் வட்டத்தில் (Ellipse) இயங்குகின்றன. ஆகவே, இவை அகிலத்தின் "நாடோடிக் கூட்டங்கள்’’ என்று வழங்கப் பெறுவதில் வியப்பொன்றும் இல்லை.

இறுதியாக எண்ணற்ற 'போர்க் கப்பற்க் கூட்டம், (Armeda) . போல் விண்கற்கள் எல்லாப் பக்கங்களினின்றும் ஞாயிற்றுக் குடும்பத்தினுள் நுழைந்த வண்ணம் உள்ளன.

இன்னும் பல்லாண்டுகள் கழித்து நாம் ஞாயிற்றுக் குடும்பத்தை ஆராய்வோமானால் மனிதன் நியமித்து அனுப்பிய செயற்கைத் துணைக்கோள்களையும் காண்போம். கம்பன் "புதல்வரால் பொலிந்தான் உந்தை"12 என்று இராமன் வாய் மொழியாகக் கூறுவதுபோல் பகலவனும் பல மக்கட்செல்வங்களை அடையப் போகின்றான். சூரிய வம்சத்தைச் சேர்ந்த் தசரதனுக்கு இந்த விதமான புத்திரப் பேறு கிட்டும்போது


12. கம்ப. யுத்த வீடணன் அடைக. 146