பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


தைச் சேர்ந்தவை. இவை பூமியைவிட எடையிலும் பருமனிலும் மிகப் பெரியனவாக விளங்குகின்றன. இவை அதிக வெப்பமாக இருப்பதால் பூமியைப்போல் கெட்டியாக இராமல் நீராகவும் வாயுவாகவும் நெகிழ்ந்துள்ளன, இவை 'வானக் கோள்கள்' (Cejestial planets) எனவும் வழங்கப் பெறும்.

இந்தக் கோள்களின் அளவுகளை நோக்க இவற்றிடையேயுள்ள தூரங்கள் மிகப் பெரியவை. இந்நிலையில் ஞாயிற்றுக் குடும்பம் மிக விரிந்து, அகன்றுள்ள, ஒரு சில மணற் கற்களை மட்டிலும் கொண்டுள்ள ஒரு பாலைவனத்தைப் போன்றுள்ளதாகக் கருதலாம். இக்கற்களே கோள்களாகும். மிக அகன்றுள்ள இடப்பரப்பிலுள்ள இவை இருக்குமிடம் தெரியாமல் மறைகின்றன. இவ்வளவு பெரிய ஞாயிற்றுக் குடும்பத்தை ஒரு பெரிய ஆடியில் காட்டுவதுபோல் ஒரு கற்பனைப் படமாக விளக்க முயல்வேன். இஃது ஒரளவு தெளிவான கருத்தினைத் தரலாம்.

பகலவனை ஒரு மீட்டர் குறுக்குவிட்டமுள்ள ஒரு பந்தாகக் கருதினால், பூமி மிகச் சிறிய ஒரு வகைச் சிவந்த பழத்திற்கு (Cherry) ஒப்பாகின்றது; இஃது இப்பந்திற்கு 100 மீட்டருக்கு அப்பால் ஒரு சென்டி மீட்டருக்கும் குறைந்த குறுக்களவுள்ள சிவந்த பழமாகக் காணப்பெறும். புதன் 3.5 மில்லி மீட்டர் குறுக்களவுள்ளதும் பந்திற்கு 40 மீட்டர் தொலைவிலுள்ளதுமான ஒரு சிறிய பட்டாணிக் கடலைக்கு ஒப்பாகும். வெள்ளி பூமியைப் போலவே ஒரு சிவந்த பழத்திற்கு ஒப்பாகின்றது; ஆனால் அது பந்தினின்றும் 77 மீட்டர் தொலைவிலிருக்கும். சுமார் 5 மில்லி மீட்டர் குறுக்களவுள்ள ஒரு மணியை (Beed)யொத்த செவ்வாய் 160 மீட்டர் தொலைவிலிருந்து பந்தினைச் சுற்றி வரும். வியாழன் என்ற பெரிய கோளைப் பந்தினின்றும் கழார் அரை கிலோ மீட்டருக்குமேல் தொலைவிலுள்ள 10செ.மீ. குறுக்களவுள்ள ஒரு பெரிய கிச்சிலிப் பழமாகக் (Qrange) கருதலாம். சனி என்ற கோள் பந்திலிருந்து கிட்டத் தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 8.5 செ.மீ. குறுக்களவுள்ள ஒரு கிச்சிலிப் பழமாக அமையும். யுரேனஸ் பந்தினின்றும் இரண்டு கி.மீ. தொலைவில் 3.5 செ.மீ. குறுக்களவுள்ள ஒரு கொட்டைப் பாக்காகவும், நெப்டியூன் மூன்று கிமீ.க்குச் சுற்று, அதிகமான தொலைவில் இன்னும் சற்றுப்