பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

137


சுமந்து செல்ல வேண்டும் அல்லவா? இதனை நழுவ விட்டு விடுவதால் மொத்த அமைப்பின் எடை மிகக் குறைந்து அது மேலே செல்வதற்கு எளிதாகின்றது. முதல் இராக்கெட்டு நழுவுவதற்கு முன்னர் இரண்டாவது அடுக்கு இராக்கெட்டு அதிலுள்ள தானியங்கு அமைப்பால் இயக்கப் பெறுகின்றது. இது செல்லும் திசையில் ஒரு மாற்றம் உள்ளது. இது மேல் நோக்கிச் செங்குத்தாகச் செல்லாமல் சுமார் 45o சாய்வில் விரைந்து செல்லுகின்றது. இங்ஙனம் விரைந்து செல்லுவதற்கேற்றவாறு இதன் திறந்த வால் பகுதி சாய்வாக அமைக்கப் பெற்றிருக்கும். இதன் வழியாக வெளியேறும் வாயுக்கள் சாய்வாகப் பீறிடுவதால் இராக்கெட்டு அதே சாய்வில் பாய்ந்து செல்லும். இச்செயல் நியூட்டனின் விதியைத் தழுவியது என்பது நினைவுகூரத் தக்கது. இராக்கெட்டின் அமைப்பு அடர்த்தி மிக்க காற்றைக் கடந்து விட்டபடியால் இரண்டாவது அடுக்கு இராக்கெட்டு அதிக வேகத்தை எய்துகின்றது. கிட்டத்தட்ட 160 கி.மீ. உயரத்தில் அதன் வேகம் மணிக்கு 19,200 கி.மீ. ஆகி விடுகின்றது.

இந்நிலையில் இராக்கெட்டு அமைப்பின் நுனியிலுள்ள கூம்பிய வடிவிலுள்ள மூக்குப் பகுதியும் விடுபட்டுக் கீழே விழுந்து விடுகின்றது. காற்றைத் துளைத்துக் கொண்டு விரைவதற்காக அமைக்கப் பெற்ற இப்பகுதிக்குக் காற்றே இல்லாத அந்த உயரத்தில் வேலை இல்லை அல்லவா? தவிர, இங்ஙனம் அது கழன்று விழுந்து அமைப்பின் எடையைக் குறைப்பதால் அதன் வேகம் மேலும் அதிகரிப்பதற்கு வழி ஏற்படும் அன்றோ? இரண்டாவது அடுக்கு இராக்கெட்டிலுள்ள எரிபொருள் தீர்ந்ததும் அதுவும் கழன்று நழுவுகின்றது. இப்போது எஞ்சியுள்ள மூன்றாவது அடுக்கு இராக்கெட்டு தானியங்கு அமைப்பால் இயங்கத் தொடங்குகின்றது, அது தான் செல்லும் திசையில் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே செல்லும். இறுதியாக அது பூமிக்குக் கிடைமட்டமான திசையில் செல்லுங்கால் அதன் வேகம் மணிக்கு 28,800 கி.மீ. ஆகி விடுகின்றது. இந்நிலையில் அதிலுள்ள வேறொரு தானியங்கு அமைப்பு இயங்கி அதன் பிடியிலுள்ள துணைக்கோளை - விண்கலத்தை-விடுவிக்கின்றது.