பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


துணைக்கோளுக்கும் மூன்றாவது அடுக்கு இரக்கொட்டின் வேகம் இருப்பதால் அது பூமியைச் சுற்றி ஓடிவருகின்றது, அது வட்ட வழியில் சுற்றி வரவேண்டுமானால் அதன் வேகம் அதன் உயரத்திற்கேற்ற சுற்றுவழி வேகமாக (Orbital velocity) அமைதல் வேண்டும். மேலும், அது பூமிக்குக் கிடை மட்டமான திசையில் வீசப் பெறுதல் வேண்டும். இந்த இரண்டு கூறுகளிலும் ஒரு சிறிது மாறுதல் ஏற்படினும் அது நீளவட்டச் சுற்று வழியிலேயே (Elliptical) சுற்றி வரும். மூன்றாவது அடுக்கு இராக்கெட்டிலுள்ள எரிபொருள் தீர்ந்ததும் அதுவும் துணைக் கோளுடன் சுற்றி வருவதுண்டு. ஆனால் அதிலிருந்து எந்த விதமான எடுகோள்களும் நமக்குக் கிடைப்பதில்லை. சாதாரணமாக இதுவும் நழுவிக் கீழே விழுந்து விடுகின்றது. இங்ஙனம் துணைக் கோளின் விண்கலத்தின் -வேகம் அதிகரிக்க எல்லா வழிகளும் மேற்கொள்ளப் பெறுகின்றன. அகப்பற்றையும் புறப்பற்றையும் நீக்கிய ஆன்மா வீட்டுலகத்தை நோக்கி விரைவது போல், மூன்று அடுக்கு இராக்கெட்டுக் கவசங்களையும் மூக்குப்பகுதியையும் நீக்கி விண்கலம் விண்வெளியில் விரைந்து செல்லுகின்றது.

மேற்கூறிய வகையில் தான் இதுகாறும் இயக்கப் பெற்ற ஆராய்ச்சித் துணைக்கோள்களும், விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற விண்கலங்களும் இயக்கப் பெற்றன. இராக்கெட்டுப் பொறிஞர்கள் பல்வேறு பொறியியல் நுணுக்கங்களை ஆய்ந்து விண்கலத்தின் வேகம் அதிகரிப்பதற்கேற்றவாறு இராக்கெட்டு அமைப்பினை உருவாக்கி வருகின்றனர்.

விண்வெளி ஆராய்ச்சி: தொலையுலகப் பயணிகட்கு விண்வெளியைப் பற்றிய பல்வேறு தகவல்கள் மிகவும் இன்றியமையாதவை. செல்ல வேண்டிய இடங்களும் புதியவை. செல்லும் வழிகளும் புதியவை. முதலில் செல்லும் வழியின் சூழ்நிலையைப் பற்றி அறிந்து கொள்ளப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்றன. பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளாக (1960–1975) அமெரிக்காவும் இரஷ்யாவும் விண்வெளிக்கு அனுப்பிய ஆளில்லா செயற்கைத் துணைக்கோள்களால் விண்வெளியைப் பற்றிய பல எடுகோள்கள் நமக்குக் கிடைத்துள்ளன.