பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

139



1.வான் அலென் கதிர் வீச்சு வளைகுழல் (Van Allen Radiation Belt): இதன் கதிர் வீச்சு அண்டக் கதிர்களின் கதிர் வீச்சினை விடப் பல்லாயிரம் மடங்கு அடர்த்தியாக உள்ளது. இச்சூழலில் புரோட்டான், எலக்ட்ரான் துகள்கள் அடங்கியுள்ளன. கதிரவன் புறத்தே காலும் இம் மின் துகள்கள் புவிக்காந்த மண்டலத்தால் கவரப்பெற்றுத் தேங்கி நிற்கின்றன. இம்மண்டலம் பூமிக்கு 1600 கி.மீ. உயரத்தில் தொடங்கி 4800 கி.மீ. உயரம் வரை பரவியுள்ளது. இந்த இரு உயரங்களுக்கிடையில் செல்வோர் கதிர் வீச்சால் பாதிக்கப் பெறாதவாறு தற்காப்புச் சாதனங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. காந்த மண்டலச் செறிவு: கதிரவ ஒளிக்குமுறல் (Solar flare) ஏற்படுங்கால் அதிகமாக வெளிவீசப்பெறும் மின்துகள்களே காந்த மண்டலத்தை உண்டாக்குகின்றன. (இச்செறிவு பூமிக்கு அணித்தாக உள்ளது.) இதனால் புவிக்காந்த மண்டலமும் மாறுதலுக்கு உட்படுகின்றது. இது பற்றி மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.

3. பூமியின் வடிவம்: வேன்கார்டு 1 என்ற உருளை வடிவமான துணைக்கோள் சுற்றி வரும் நீள்வட்டச் சுற்று. வழியில் ஏற்பட்ட மாறுதல்களால் பூமியின் வடிவம் இரு துருவங்களிலும் தட்டையாக்கப் பெற்ற உருளை போன்று இருப்பதாகத் தெரியவந்தது.

இங்ஙனம் பல தகவல்கள் அறியப் பெற்றுள்ளன.

விண்வெளிப் பேரிடர்கள்: இராக்கெட்டு விமானத்தில் செல்வோர் புறப்பட்டது முதல் திரும்பும் வரையிலும் சந்திக்க நேரும் பேரிடர்களை முன்னரே அறிந்து கொண்டு அவற்றைச் சமாளிக்கும் முறைகளைத் திட்டமிட்டுக் காத்துக் கொள்ள வேண்டும்.

1. சூழ்கிலைப் பாதுகாப்பு: விண்வெளி காற்றில்லாத வெற்றிடமாகும். அந்த மெளனப் பெருவெளியில் கடுங்குளிர், அழுத்தமின்மை, வாயுவில்லா சிரமம், அண்டக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், விண் கற்கள் முதலிய இடையூறுகளைத் தவிர்த்தாக வேண்டும். அந்த வெற்றிடச் சூழ்நிலையில் மனிதனது குருதி கொதிக்கத் தொடங்கி அவன் உயிர் துறக்கவும் நேரிடும். இதனால் பூமியில் அவன் வாழும் சூழ்நிலையைக் கூண்டினுள் அமைத்தல் வேண்டும்.