பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

145


கொள்ளல் வேண்டும். இச்சோதனைகள் முதலில் பூமியின் சுற்று வழியில் செய்து பார்த்தல்வேண்டும். முதலில் ஆளில்லாத விண்கலங்களைக் கொண்டும், அதன் பிறகு மூன்று விண்வெளி வீரர்களைக் கொண்டும் இச்சோதனைகள் செய்யப் பெறுதல் வேண்டும். முதல் ஆறு பயணங்கள் ஆளில்லாத பயணங் களாகும்.

அப்போலோ-1: கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் ஊர்தியும் விண்வெளிக் கலமும் அடங்கிய இணைப்பின் ஏற்புடைமையும் (Compatibility), அமைப்பின் உருக்குலையா நிலையும் (Structural integrity) சரியாக அமைகின்றனவா என்பதைச் சோதனை மூலம் பார்ப்பதே இப்பயணத்தின் நோக்கமாகும். மேலும், விண்வெளியில் செல்லும் நிலையில் கலத்தின் பல்வேறு அமைப்புகள் சரியாக இயங்குகின்றனவா? விண்வெளிக்கலத்திலுள்ள கவசம் அதிக வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கின்றதா? அந்த வெப்பத்துடன் அதனைப் பூமிக்கு எங்ஙனம் மீட்பது? என்பன போன்ற பிரச்சினைகளை இதில் சோதித்து வெற்றி கண்டனர்.

அப்போலோ-2: இதுவும் பூமியின் சுற்று வழியில் இயங்கியது. கலத்தின் கருவித் தொகுதியிலிருந்து சேமித்த நிலையிலிருக்கும் திரவ நீரியத்தையும் (Hydrogen), திரவ உயிரியத்தையும் (Oxygen பூமியின் இழுவிசை சூன்யமாக இருக்கும்பொழுது தனியாகப் பிரிக்க முடியுமா? கலத்தின் இயக்கம் நின்று போனால் அதனைத் திரும்பவும் இயங்கச் செய்யமுடியுமா? என்பவற்றைச் சோதித்தலே இப்பயணத்தின் நோக்கங்களாக இருந்தன. இவற்றைச் சோதித்து வெற்றி கண்டனர்.

அப்போலோ-3: இப்பயணத்தில் கட்டளைப் பகுதி (Command module) பணிப்பகுதி (Service module) இவற்றின் துணை அமைப்புகளிலும் விண்வெளிக் கலத்தின் ஏற்புடைமையிலும் அமைப்பின் உருக்குலையா நிலையிலும் சோதனைகளை மேற்கொள்ளல், அதிக வெப்பத்துடன் கலம் திரும்பி வருங்கால் விண்கலத்தின் கவசம் சரியாக இருக்கின்றதா? என்பதைச் சோதித்தல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றலே இப்பயணத்தின் குறிக்கோளாகும். இப்பயணமும் இனிதாக நிறைவேறியது.

த-10