பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


அப்போலோ-11 பயணத்தைப் போலவே உள்ளது. அந்தக் கதையில் 'பால்டிமோர் துப்பாக்கிக் கழகத்தின்' உறுப்பினர்கள் 19-ஆம் நூற்றாண்டில் ஃபிளாரிடாவிலிருந்து நான்கு நாள் பயணத்தில் அலுமினியத்தாலான எறிகருவியைச் (Projectile) செலுத்தினர். அங்ஙனமே ஃபிளாரிடாவிலுள்ள கென்னடிமுனையிலிருந்தே மூன்று விண்வெளி வீரர்களைக் கொண்ட அப்போலோ -11 விண்கலம் தனது எட்டு நாள் பயணத்தைத் தொடங்கியது. வெர்னர் குறிப்பிட்ட ஊர்தியின் எடை 19, 250 இராத்தல்; அப்போலோ-11 இன் கட்டளைப் பகுதியின் எடை மட்டிலும் 12, 250 இராத்தல். ஆனால் கிளம்புவதற்கு முன் அப்போலோ-11 இன் எடை கட்டத்தட்ட 6,500,000 இராத்தல்களாகும்.

அப்போலோ-8, அப்போலோ-11 இன் பயணங்கள் எனது. 'அம்புலிப் பயணம்' என்ற நூலில் மிக்கச் சுவையுடனும் கற்பனை நயத்துடனும் எழுதப் பெற்றுள்ளன. அங்ஙனமே. அப்போலோ-12 முதல் 17 முடிய உள்ள பயணங்களைப் பற்றி ஈண்டு விளக்க நேரம் இல்லை. இவற்றைப் பற்றியும் என் நூலில், கண்டு கொள்ள வேண்டுகின்றேன் இன்று விண்வெளி ஆய்வகம், விண்வெளி ஓடம், விண்வெளி நிலையங்கள் ஆகியவை அமைக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய், வெள்ளி முதலிய கோள்களைப் பற்றிய ஆய்வுகளும் நடைபெற்று. வருகின்றன.

9. உயிரியல்

உயிரியல் (Biology) என்பது விலங்கியலும், தாவர இயலும், உடலியலும் இணைந்துள்ள ஒர் அறிவியல் துறை. இத்துறை பற்றிய பயனுள்ள முறையில் அறிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கிய செய்திகளை ஈண்டுத் தெரிவித்து விளக்க முயல்வேன். அவற்றுள் ஒன்று நம்முடைய பிறப்பு பற்றியது. அதனை முதலில் விளக்குவேன்.

1. பிறப்பு: 'அரிதரிது மானிடராதல் அரிது; மானிடராயினும் கூன் குருடு பேடு நீங்கிப் பிறத்தலரிது...' என்று நம் முன்னோர்கள் தத்துவ நோக்கில் நம் பிறப்பைப் பற்றிக் கூறிப்போந்துள்ளனர். இன்று நாம் அறிவியல் ஊழியில் வாழ்கின்றோம்.