பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


விந்தணுக்கள் ஓர் ஆஸ்பிரின் மாத்திரை பருமனுள்ள இடத்தில் அடங்கி விடும் என்றும் கருதப் பெறுகின்றது. இதிலிருந்து இரண்டன் அளவிற்குமுள்ள வேற்றுமையை ஒருவாறு உணரலாம். கருவுற்ற முட்டை கருப்பையில் புதைந்துகொள்ளும் வரை அதற்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொண்டிருப்பதே அதன் பெரிய அளவிற்குக் காரணமாகும். முட்டை கருவுற்றதும் அதிலுள்ள மஞ்சட் கருப்பொருளை (Yolk) கருவுற்ற முட்டை கருப்பையில் ஒட்டிக் கொள்ளும் வரை அதற்கு உணவாக அமைகின்றது. முட்டையில் நுழைந்த விந்தணுவின் தலை தன்னுடைய நிறக்கோல்களை அவிழ்க்கும் பொழுதே முட்டையின் உட்கருவும் உடைபட்டுத் தன்னிடமுள்ள 23 நிறக்கோல்களை. விடுவிக்கின்றது. இதுவே கருவுறுதல் என்பது. எனவே, நம்முடைய வாழ்வு 46 நிறக் கோல்களைக் கொண்டு தொடங்குகின்றது என்பதை நாம் அறிகின்றோம். உடலிலுள்ள உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும் இந்த 46 நிறக் கோள்களும் 23 இனைகளாக அமைந்து கிடக்கும். இவற்றில் ஒன்று விந்தணுவிலிருந்து வந்தது; மற்றொன்று கருவுறுவதற்கு முன் முட்டையிலேயே இருந்தது. எனவே, ஒரு குழந்தை தன் உடலிலுள்ள உயிரணுவின் நிறக் கோள் இணையில் ஒன்றினைத் தந்தையிடமிருந்தும் மற்றொன்றினைத் தாயினிடமிருந்தும் பெறுகின்றது என்பதை அறிகின்றோம்.

கருவுற்ற முட்டையின் வளர்ச்சி: கருக்குழலில் கருவுற்ற முட்டை மூன்று அல்லது நான்கு நாட்களில் கருப்பையை வந்தடைகின்றது. கருக்குழலில் இருக்கும் போதே அது வளர்ச்சியடையத் தொடங்குகின்றது. அணுப் பிரிவுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்நிலையில் கருப்பை புதிதாக உண்டான இளஞ்சூலை ஏற்றுக் கொள்வதற்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டுள்ளது. கருப்பையின் உள்ளே இருக்கும் அணைச்சவ்வு புதிய இழையங்களால் தடித்து அதிக மான குருதியோட்ட நிலைகளைப் பெறுகின்றது. முதல் சூழ்நிலை: விந்தணுவும் முட்டையணுவும் சேர்ந்து ஒரே அணுநிலையில் இருந்த கரு இரண்டு அணுக்களாகப் பிளந்து கொண்டு இரண்டு தனி அணுக்களாக மாறி விடுகின்றது. இவை இரண்டும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டுள்ளன.