பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்



தாவிவரும் வானரங்கள் தண்குவட்டில் கற்கடகம்
மேவிவரக் கண்டோடும் வேங்கடமே (17)

என்று காட்டுவர். அடுத்து. யானைகளின் ஊடற்காட்சி வருகின்றது. மருத நில உரிப் பொருள் ஈண்டுக் குறிஞ்சி நிலக் கருப்பொருளாகக் காணப்படுகின்றது. பிடி களிற்றினிடம் ஏதோ ஒரு குற்றத்தைக் கற்பித்துக் கொண்டு அதன் காரணமாக அதனிடம் வெறுப்புக் காட்டி ஊடி நிற்கின்றது. இது வானத்தில் தற்செயலாகச் சிங்க வடிவமான சிங்க ராசியைக் கண்ணுறுகின்றது. கண்டதும் அஞ்சி அந்த அச்சமிகுதியினால் ஊடலை மறந்து தானே ஒடி ஆண் யானையைப் பற்றுக்கோடாகக் கொண்டு அதனைத் தழுவுகின்றது.

ஒண்சிந்து ரத்தைவெறுத் தூடும் பிடிவேழம்
விண்சிங்கம் கண்டனைக்கும் வேங்கடமே!(18)

என்பது கவிஞனின் சொல்லோவியம்.

அடுத்து, 'கழைக் கூத்து' ஒன்றினைக் காட்டுகின்றார் திவ்வியகவி. மலையின் மீது ஓங்கி வளர்ந்துள்ள மூங்கிலுக்கு நேரான பெண் வடிவமான கன்னியா ராசி வருகின்றது. இக்காட்சி கழைக் கூத்திபோல் தோற்றம் அளிக்கின்றது.

மாதுமடக் கன்னிகழை வந்தணுகிக் கம்பத்தின்
மீதுநடிப் பாளொக்கும் வேங்கடமே! (19)

என்பது அய்யங்காரின் சொல்லோவியம். இஃது ஒர் அற்புதமான காட்சி. மூங்கிலின் வளத்தைக் கொண்டு இன்னொரு அற்புதமான காட்சியை நம் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார் திவ்வியகவி. ஒரு மூங்கில் வானுற ஓங்கி வளர்ந்து நிற்கின்றது. அதற்கு நேராகச் சுறாமீன் வடிவமான மகர ராசி வந்து தங்கும்போது அது மன்மதனது கொடி மரம் போல் காட்சி அளிக்கின்றது.

தேன்ஏறித் தேன்வைக்கும் திண்கழைமேல் விண்மகரம்
மீன்ஏறி வேள்கொடியாம் வேங்கடமே (22)

என்று காட்டுவர். மன்மதன் சுறாமீன் வடிவத்தைக் கொண்ட கொடியை உடையவன்; அதனால் அவனுக்கு வடமொழியில்