பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-அன்று

43



போது என்றைக்கும் எங்கும் கண்டறியாத திருக்கோலம் கொண்டிருந்தான் எம்பெருமான். அப்பெருமானை இன்னானென்று அறிய மாட்டிற்றிலள். முகத்தை நேரே பார்த்து முன்னிலையாக்கிச் சொற்கள் கூறமுடியாதபடி சோதி வெள்ளம் அலையெறிந்து தள்ளுகின்றது. அதனால் அப்பெருமானுடைய ஒப்புயர்வற்ற வடிவழகையும் திவ்விய அணிகள் திவ்விய ஆயுதங்கள் இவற்றின் பொருத்தங்களையும், சிருங்கார விலாசங்களையும், மற்றும் கண்ட அதிசயங்களையும் தன் தோழியிடம் சொல்லி வியக்கின்றாள்.

பொன்இவர் மேனி; மரக தத்தின்
பொங்கிலஞ் சோதி அகலத்து ஆரம்
மின்;இவர் வாயில்நல் வேதம் ஒதும்
வேதியர்; வானத்து ஆவர்; தோழி!
என்னையும் நோக்கிஎன் அல்குல் நோக்கி,
ஏந்து இளம் கொங்கையும் நோக்குகின்றார்;
அன்னைஎன் நோக்கும்என்று அஞ்சுகின்றேன்;
அச்சோ ஒருவர் அழகி யவா!58

"தோழி! நான் பெற்ற பேறே பேறு; அந்தோ! இழந்தாயே! நீ காணப்பெறவில்லையோ" என்கின்றாள் பரகால நாயகி, தோழியை நோக்கி, "நங்காய்! என்ன அற்புதம் காணப் பெற்றாய்? விரித்துரையும்" என்று வினவுகின்றாள் தோழி.

திவ்வியாத்தும் சொரூபம் திவ்விய குணம் முதலானவற்றையெல்லாம் விட்டு முந்துற முன்னம் திவ்விய மங்கள விக்கிரகத்திலே தன் நெஞ்சு பறியுண்டமை தோன்றச் சொல்லுகின்றாள்: "பொன் இவர் மேனி" என்கின்றாள். பொன்நிறம் போன்ற நிறமுடையவளான பெரிய பிராட்டியின் இடைவிடாத சேர்க்கையினால் எம்பெருமானுடைய கரிய திருமேனியும் பொன்னிறமாக ஆய்விடுகின்றது. "திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன்"59 என்ற பேயாழ்வாரின் பாசுரத்தை ஈண்டு நினைத்தல் தகும்.

உண்மையான உருவத்தின் நிறம் அடுத்து பேசப் பெறுகின்றது. "மரகதப் பச்சையின் சோதி போன்ற சோதியுடைத்-


58. பெரி.திரு. 9.2:1

59. மூன். திரு. 1