பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.


பதினெட்டு இயல்களும் யோகம் என்றே பெயர் பெறுகின்றன. எ.டு. சாங்கிய யோகம், கர்மயோகம், விபூதியோகம், புருஷோத்தம யோகம் முதலியன காண்க. இந்த யோகங்களை பார்த்தனுக்குச் சமரசமாக வழங்கும் பரந்தாமன் யோகேசுவரன் என்ற திருநாமம் பெறுகின்றான். அதுகிடக்க.

3. அணுவியல்

அணுவியலை விளக்கும்போது இயற்பியல், வேதியியல் என்ற இரு பெரும் இயல்கள் அடங்கியுள்ளதை அறியலாம்.

அணுவின் அளம்பரிய ஆற்றல்: இரண்டாம் உலகப் பெரும் போர்க் காலத்தில் மேற்கொள்ளப் பெற்ற அணுகுண்டு சோதனையால் அணுவின் அளப்பரிய ஆற்றல் ஒருவாறு தெளிவாகின்றது. 1945 ஆம் ஆண்டு சூலை மாதம் 16-ஆம் நாள் அன்றுதான் அணுகுண்டின் அழிவுக் கூத்து வெளியாயிற்று. அமெரிக்கா கண்டத்தில் மெக்சிகோ என்பது ஒரு நாடு. அந்நாட்டிலுள்ள ஒரு பாலை வனத்தில்தான் இந்த சர்வ சம்ஹாரக் கூத்தின் ஒத்திகை நடத்தப் பெற்றது. அங்கே எஃகினால் செய்த பெரிய வட்டக் கோபுரம் ஒன்று அமைக்கப்பெற்றது. அந்த வட்டக் கோபுரத்தின் குறுக்களவு 6½ ஃபர்லாங்;. அதாவது முக்கால் மைலுக்கு மேலாகும். இந்தக் கோபுரத்தின் எடை நூற்றுக் கணக்கான டன் எடையுள்ளது.

இந்தக் கோபுரத்தினின்றும் 15 மைல் தொலைவில் பல இடங்களில் நிலவறைகள் அமைத்து அங்கே சில அறிவியலறிஞர்களையும் அவர்களுடன் சில நுட்பமான கருவிகளையும் வைத்தனர். அணுகுண்டு ஒன்றினை இந்தக் கோபுரத்தின்மீது எறிய வேண்டும். அச்சமயத்தில் அங்கு நிகழ்வதை 15 மைலுக்கு அப்பாலுள்ள அறிவியலறிஞர்கள் கருவிகள் மூலமும், தமது கரணங்கள் மூலமுமாகக் குறிப்புகள் எடுக்க வேண்டும் என்பது தான் திட்டம். அறிவியலறிஞர்கட்குச் சில கட்டளைகள் இடப்பெற்றன. அணுகுண்டு வீசப்பெறும் நேரம் இவர்கட்குத் தெரிவிக்கப் பெற்றது. அந்த நேரத்தில் இவர்கள் குப்புறப் படுத்துக் கிடக்க வேண்டும். கருவிகள் தாமாகவே நிகழ்வனவற்றைப் பதிந்து கொள்ளும். ஆகவே, அவற்றை அப்படியே விட்டு விட்டு இவர்கள் நிகழ்வனவற்றைக் குறித்துக் கொள்ள வேண்டும். இவையே இவர்கட்குத் தரப் பெற்ற கட்டளைகள்.